செங்கை சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசை
செங்கை மாவட்டத்தில் உள்ள பிரபல சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் விமரிசையாக நடந்தது.
அச்சிறுபாக்கத்தில் தொண்டை நாட்டு சிவ ஸ்தலங்களில் ஒன்றானதும், சைவ சமய குறவர்களால் பாடல் பெற்றதுமான, புகழ்பெற்ற இளங்கிளி அம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோவில் உள்ளது. ஆருத்ரா நிகழ்வையொட்டி, நேற்று, அதிகாலை 4:00 மணிக்கு நடராஜ பெருமானுக்கு, 16 வகையான மூலிகை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து காலை 6:00 மணிக்கு மஹா தீபாராதனை நடந்தது. நடராஜ பெருமான், சிவகாமசுந்தரி, காரைக்கால் அம்மையார், திருஞானசம்பந்தர் ஆகியோர் சூர்ய பிரபை வாகனத்தில் எழுந்தருளி திருவூடல் உத்சவம் நடந்தது. சூணாம்பேடு அடுத்த வில்லிப்பாக்கம் கிராமத்தில், பழமையான முத்தாம்பிகை உடனுறை அகஸ்தீஸ்வரர் கோவில் உள்ளது. திருவாதிரை நாளான நேற்று காலை 11:30 மணிக்கு ஆருத்ரா விழா விமரிசையாக நடந்தது.
இதில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, பின் சிறப்பு அலங்காரத்தில் அகஸ்தீஸ்வரருக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலில், நேற்று காலை 8:00 மணிக்கு, நடராஜர், சிவகாமி, மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேக வழிபாடு நடந்தது. காலை 10:00 மணிக்கு, ரிஷபதீர்த்த குளத்தில் நடராஜர் தீர்த்தவாரி நீராடினார்.
தொடர்ந்து, சுவாமியர் வீதியுலா சென்று, கோவில் திரும்பியதும், நடராஜர், சிவகாமி திருவூடல் நிகழ்ந்து உத்சவம் நிறைவு பெற்றது. திருக்கச்சூரில் உள்ள பழமையான கச்சபேஸ்வரர் கோவில் நடராஜர் சமேத சிவகாமி சுந்தரிக்கு, சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்று சுவாமி உட்பிரகாரத்தில் புறப்பாடு நடந்தது. பேரமனுார் வாலீஸ்வரர் கோவில், கொளத்துார் துளசீஸ்வரர் கோவில், சாஸ்திரம்பாக்கம் வைத்தீஸ்வரர் கோவில்களிலும் பூஜை நடந்தது. செங்கல்பட்டு அடுத்த, ஆத்துாரில், தர்மசம்வர்தனி சமேத முக்தீஸ்வரர் கோவிலில் 21 திரவியங்களில் அபிஷேக திருமஞ்சனம் செய்யப்பட்டது.
இரவு சங்கல்பம் கலசஸ்தாபித ஹோமம், மஹாஅபிஷேகம் நடந்தது. மாமல்லபுரம் மல்லிகேஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும், ஆருத்ரா தரிசன உத்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.