இளையாத்தங்குடியில் ஆருத்ரா தரிசனம் தேரோட்டம் கோலாகலம்
கீழச்சிவல்பட்டி: திருப்புத்துார் ஒன்றியம் இளையாத்தங்குடி கைலாசநாதர் சுவாமி நித்திய கல்யாணி அம்மன் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜர் தேரில் எழுந்தருள தேரோட்டம் நடந்தது.
இக்கோயிலில் ஆருத்ரா தரிசன திருவிழா பத்து நாட்கள் நடைபெறும். டிச. 25ல் மாணிக்கவாசகருக்கு காப்புக்கட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி மாலை 6:00 மணிக்கு மாணிக்க வாசகர் திருவீதி வலம் வந்தார். எட்டாம் நாளில் 38 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சுவாமிக்கும் அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஒன்பதாம் நாள் காலையில் மாணிக்கவாசகர் குதிரை வாகனத்தில் புறப்பாடும். இரவில் பஞ்சமூர்த்தி புறப்பாடும் நடந்தது.
நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடராஜர், மாணிக்கவாசகர் ஆகியோருக்கு அபிஷேகம் நடந்தது. பின்னர் அலங்காரத்தில் எழுந்தருளிய நடராஜருக்கு காலை 8:50 மணிக்கு ஆருத்ரா தரிசன மகா தீபாராதனை நடந்தது. கோயிலிலிருந்து நடராஜர் புறப்பாடாகி தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து சிவகாமி அம்மாள், மாணிக்கவாசகர் சப்பரத்தில் எழுந்தருளினர். காலை 10:35 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. சப்பரத்தில் அம்பாள்,மாணிக்கவாசகர் வலம் வந்தனர்.