திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்றப்பட உள்ளதை காண்பது எங்கள் பாக்கியம்
திருப்பரங்குன்றம்: ‘நீதிமன்ற உத்தரவால் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்துாணில் தீபம் ஏற்றப்படுவதை பல ஆண்டுகளுக்கு பின் நாங்கள் காண இருப்பது எங்களது பாக்கியம்; சங்கடஹர சதுர்த்தி நாளில் சங்கடம் நீங்கியது; தீபாவளி போல பட்டாசு வெடித்துக்கொண்டாடினோம்’ என மதுரை மக்கள், திருப்பரங்குன்றம் வாழ் மக்கள் ஆனந்தக் கண்ணீர் மல்க கூறினர்.
திருப்பரங்குன்றம் பக்தர்கள் கூறியதாவது:
மலையை காட்டிலும் மகிழ்ச்சி தேன்மொழி: நான்காவது முறையாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த மலையை காட்டிலும் பெரிய அளவில் எங்களுக்கு மகிழ்ச்சி. தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும் என்ற அற வழிப் போராட்டத்திற்கு சுவாமி முருகன் கொடுத்த மிகப்பெரிய வெற்றி இது. ஆண்டுதோறும் திருக்கார்த்திகை அன்று தீபத்துாணில் மகா தீபம் தொடர்ந்து ஏற்ற வேண்டும். அனைத்து ஹிந்து மக்களுக்காகவும் தீபம் ஏற்ற வேண்டும் என்று போராடினோம். எங்களை கைது செய்தனர். அன்று எங்களுக்கு கவலையாக இருந்தாலும், இன்று சங்கடஹர சதுர்த்தியில் சங்கடம் நீங்கி தீபம் ஏற்ற வேண்டும் என தீர்ப்பு வந்தது வாழ்நாள் மகிழ்ச்சியாகும்.
மூதாதையர் சொன்னதை பார்க்க போகிறோம் அன்னபூரணி: இப்போது தான் இந்த ஊருக்கே விமோசனம் கிடைத்தது போல் உள்ளது. குறிப்பாக பழநி ஆண்டவர் கோயில் தெரு, கோட்டை தெரு மக்கள் நிம்மதியாக உள்ளோம். இத்தீர்ப்பை ஒவ்வொரு முருக பக்தரும் கொண்டாட வேண்டும். தீபம் ஏற்ற வேண்டும் என ஒரு மாதமாக பல்வேறு அறப்போராட்டங்களை நடத்தினோம். எங்களை போலீசார் பாகிஸ்தானில் வாழ்பவர்களை போல் பார்க்கின்றனர். எங்கள் மூதாதையர் தீபம் ஏற்றியதை பார்த்ததாக கூறினர். விரைவில் அந்த பாக்கியம் எங்களுக்கும் கிடைக்க உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
தீர்ப்பு மக்களின் உயிர்நாடி கிருஷ்ணமூர்த்தி: வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு. நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு கூறியும் தீபம் ஏற்றப்படவில்லை. இந்த தீர்ப்பையாவது நடைமுறைப்படுத்துவார்களா என்பது சந்தேகமாகவே உள்ளது. தேர்தல் முடிந்த பின்பு ஏற்றுவார்களா என்பதும் கேள்விக்குறியே. எதிர் தரப்பினர் எந்த நீதிமன்றத்திற்கு சென்றாலும் அங்கு அவர்கள் மனு தள்ளுபடிதான் செய்யப்படுகிறது. தீபத்துக்கு ஆதரவாக தான் தீர்ப்பு வந்துள்ளது. இது சுவாமிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இந்த தீர்ப்பு ஹிந்து மக்களின் உயிர்நாடி ஆகும். தொடர்ந்து நீதிமன்றம் செல்வதால் பொதுமக்கள் நிம்மதி இழந்து உள்ளனர். தீர்ப்பை மதித்து தீபம் ஏற்ற வேண்டும்.
தீர்ப்பை மதிக்க வேண்டும் வீரணன்: திருப்பரங்குன்றம் மலை முருகனுக்கு சொந்தமானது. அரசியலுக்காக பலர் இஷ்டத்திற்கு பேசுகின்றனர். மலை முந்தியதா. மதம் முந்தியதா என்ற கேள்வியை ஒவ்வொருவரும் கேட்டுப்பாருங்கள். எது முந்தியது என்பது தெரியும். இந்த மலையை வேறு யாரையும் சொந்தம் கொண்டாட விடமாட்டோம். இரு நீதிபதிகளின் இந்தத் தீர்ப்பையாவது தமிழக அரசு மதித்து ஹிந்துக்களின் மனதை புண்படுத்தாமல் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும். இதுதான் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை. இவ்வாறு கூறினர்.
மதுரை மக்கள் கூறியதாவது:
பூர்ணசந்திரனின் ஆத்மா மகிழ்ச்சி அடையும் சசிராமன், பா.ஜ., மாநில செயற்குழு உறுப்பினர்: மக்கள் என்ன நினைத்தார்களோ அது தீர்ப்பாக வந்துள்ளது. தமிழக அரசு பல கட்டுக்கதைகளை கூறி தடுத்தது. மதச்சாயம் பூசியது. ஆனால் உண்மை வென்றது. தீபத்திற்காக தன் உடலையே தீபமாக்கி உயிர் தியாகம் செய்த பூர்ணசந்திரனின் ஆத்மா மகிழ்ச்சி அடையும். இப்போதும் தீபத்துாணை நிலஅளவைக்கல் என்று தி.மு.க., அரசு தொடர்ந்து பொய் கூறுகிறது. நீதிமன்ற தீர்ப்பை அமைச்சர் ரகுபதி விமர்சிப்பது அவரது பதவிக்கு அழகல்ல. கோயிலை பற்றி பேசும்போது சுடுகாட்டை பற்றி பேசுகிறார். கல்யாண வீட்டில் இறப்பு குறித்து பேசுவது போல் அவரது பேச்சு உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
இந்தியாவே எதிர்பார்த்த தீர்ப்பு கார்த்திக்: தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்ற நீதிபதி சுவாமிநாதனின் தீர்ப்பை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளது வரவேற்கத்தக்கது. தீபம் ஏற்றும் இடம் தர்காவுக்கு சொந்தமானது என்று தமிழக அரசு கூறியதற்கு நீதிபதிகள், ‘இது சிறுபிள்ளைத்தனமானது’ என்று தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தனர். இந்தியாவே எதிர்பார்த்த இந்த தீர்ப்பை அனைத்து ஹிந்துக்களின் சார்பாக வரவேற்கிறேன். தீர்ப்பிற்கு எதிராக உச்சநீதிமன்றத்திற்கு தி.மு.க., அரசு போனால் அது ஹிந்துக்களை மேலும் அவமதிப்பதாகும்.
வேண்டுதல் பலித்துவிட்டது செல்வி: தீர்ப்பை கேட்டதும் அப்படி ஒரு சந்தோஷம். இப்பிரச்னையை தேவையில்லாமல் அரசு பெரிதாக்கி விட்டது. நீதி, நேர்மை என்றும் தோற்காது என்பதற்கு தீபத்துாண் விவகாரம் சிறப்பு உதாரணம். சுவாமி முருகனுக்கு நன்றி. அவரது இடத்தில் தீபம் ஏற்ற போராடி வெற்றி பெற்று அவருக்கு நன்றி சொல்ல வேண்டிய நிலைக்கு அரசு கொண்டு வந்து விட்டது. உண்மைக்காக போராட வேண்டியுள்ளது. எங்கள் வேண்டுதல் பலித்து விட்டது. ஆனாலும் இன்னும் போக வேண்டிய துாரம் நிறைய உள்ளது. அதற்கான பாதையை முருகன் காட்டுவார். நியாயமான வழியில் போராடியவர்களுக்கு மதுரை மக்கள், பக்தர்கள் சார்பில் நன்றி.
போராடும் நிலை மாற வேண்டும் துர்கா: நான் சென்னையில் இருந்து 28 ஆண்டுகளுக்கு முன் மதுரைக்கு வந்தேன். அன்றுமுதல் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளேன். மாதாமாதம் கிரிவலமும் செல்ல தவறுவதில்லை. திருக்கார்த்திகையன்று மலை உச்சி தீபத்துாணில் தீபம் ஏற்றலாம் என்ற உத்தரவை நிறைவேற்ற இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே என்பது தான் எனக்கு ஆதங்கமாக உள்ளது. தமிழக அரசு மேல்முறையீடு செய்ய உச்சநீதிமன்றம் சென்றால் ஹிந்துக்கள் ஒற்றுமை பலப்படும். ஒன்றுபட்டால் எதையும் சாதிக்க முடியும் என்பதை உச்சநீதிமன்றத்திலும் நிரூபிக்கப்படும். தங்கள் வழிபாட்டு உரிமைக்காக ஹிந்துக்கள் ஒவ்வொரு முறையும் போராடி, நீதிமன்றம் சென்று அனுமதி வாங்கும் நிலை மாற வேண்டும். இவ்வாறு கூறினர்.
சங்கடம் நீங்கியது சிவசங்கரி: கடவுளுக்கு நன்றி. சதுர்த்தியில் சங்கடம் நீங்கியது. முருகனுக்கு உகந்த செவ்வாய் கிழமையான இன்று சிறப்பான தீர்ப்பு வந்துள்ளது. இந்த மகிழ்ச்சியை சொல்ல வார்த்தை இல்லை. நீதிமன்றம் சரியான தீர்ப்பு வழங்கியுள்ளது.
இனி யாராலும் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது கி.தாரணி கிருபா: கோடான கோடி முருக பக்தர்களுக்கு கிடைத்த மகிழ்ச்சி. குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பதற்கேற்ப இந்த மலைக் கோவில் மற்றும் ஊரின் பெயரே திருப்பரங்குன்றம். இனி யாராலும் தீபம் ஏற்றுவதை தடுக்க முடியாது. இவ்வாறு கூறினர்.