கவுமார மடாலயத்தில் 69-வது ஆண்டு குருபூஜை
கோவை: 135 ஆண்டுகள் பழமையான கவுமார மடாலயத்தை நிறுவிய ராமானந்த சுவாமிகளின், 69-வது ஆண்டு குருபூஜை விழா, தண்டபாணி சுவாமிகள் நுால்கள் வெளியீட்டு விழா மற்றும் கல்வி, இசை, சமூக சேவைகளில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா என, முப்பெரும் விழா, சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில் நடந்தது.
விழாவுக்கு ராமானந்த குமரகுருபர சுவாமிகள் தலைமை வகித்தார். தண்டபாணி சுவாமிகளின் நுால்களை பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகள், மயிலம் பொம்மபுர ஆதினம் சிவஞான பாலய சுவாமிகள், பழனி ஆதினம் சாது சண்முக அடிகள், தென்சேரிமலை ஆதினம் முத்து சிவராமசாமி அடிகள், காமாட்சிபுரி ஆதினம் சாக்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் ஆகியோர் வெளியிட்டனர். அதை தொடர்ந்து கல்வி, இசை, சமூக சேவையில் சாதனை படைத்த அண்ணா பல்கலை முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி, அவினாசிலிங்கம் பல்கலை, வேந்தர் குழந்தைவேல், ஐ.நா. சபை சிறப்பு துாதர் ராஜா ஆறுமுகம், மலேசியாவை சேர்ந்த டாக்டர் ஜெயபாலன் வள்ளியப்பன், லண்டனை சேர்ந்த சிவதம்பு, சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த கணேஷ் குமார், வடவள்ளி திருப்புகழ் குழுவை சேர்ந்த வைத்தியநாதன், மற்றும் கவுமார மடாலய தவில்- நாதஸ்வர கலைஞர்களான கனகராஜ், கோவிந்தராஜ், மாணிக்கராஜ், சுணேசன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து மாலையில் ரத யாத்திரை நடந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ராமானந்த சுவாமிகள் திருவுருவ சிலை வைக்கப்பட்டு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, சிவானந்தபுரம் பகுதியில் உள்ள 10 -க்கும் மேற்பட்ட கோவில்களுக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் ரத யாத்திரை கவுமார மடாலயத்தை வந்தடைந்தது. ஏராளமான பக்தர்கள் மற்றும் மடத்தின் தொண்டர்கள் பங்கேற்றனர்.