மயிலாடும்பாறை அருகே 3000 ஆண்டுகள் பழமையான நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிப்பு
கடமலைக்குண்டு; மயிலாடும்பாறை அருகே பாம்பாடும்பாறையில் 3000 ஆண்டுகள் பழமையான பெருங்கற்கால நினைவு சின்னங்களை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
வாய்க்கால் பாறையைச் சேர்ந்த வேல்முருகன் என்பவர் கொடுத்த தகவலில், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான செல்வம் இப் பகுதியில் விரிவான கள ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வில் பண்டைய மக்களின் வாழ்விடமாகவும் வழிபாட்டு இடமாகவும் விளங்கியது உறுதி செய்யப்பட்டுள்ளது. செல்வம் கூறியதாவது: வைகை ஆறு மற்றும் அதன் துணை ஆற்றின் கரைகளில் பெருங்கற்கால மக்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் ஏற்கனவே கிடைத்துள்ளன. அந்த வகையில் சதுரகிரி, கட்டளைக்கோம்பை, மற்றும் பஞ்சஞ்தாங்கி மலைப் பகுதிகளில் உற்பத்தியாகி யானை கஜம் வழியாக சென்று வைகையுடன் சங்கமிக்கும் மூங்கிலாறு ஒரு முக்கிய நீர் ஆதாரமாக உள்ளது. இந்த ஆற்றின் துவக்க புள்ளியான பாம்பாடும்பாறை பகுதியில் பல நூற்றாண்டுகளாக மக்கள் தொடர்ந்து வாழ்ந்துள்ளனர். இதற்கு சான்றாக பாறையில் செதுக்கப்பட்டுள்ள பழமையான வழிபாட்டு இடங்கள், ஆங்காங்கே காணப்படும் பாறை உரல்கள் பாறையை சுற்றியுள்ள ஈமச்சின்னங்கள் ஆகியவை உள்ளன. பாம்பாடும் பாறை வடக்கு சரிவில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் எஞ்சி உள்ள சிறு மண் பரப்பில் கல் வட்டங்கள் மற்றும் நெடுங்கல் அமைப்புகள் காணப்படுகின்றன. இதில் தனிநிலை நெடுங்கல், இரட்டை நெடுங்கல், துணைக்கல் மற்றும் நடு கல் என பல்வேறு நிலைகளில் நினைவுச் சின்னங்கள் உள்ளன. பெரும்பாலான நெடுங் கற்களின் மேல் முனைப்பகுதி கூர்மையான முக்கோண வடிவில் செதுக்கப்பட்டுள்ளது. இது அக்கால மக்களின் தனித்துவமான கலைத்திறனை பிரதிபலிக்கிறது. இதற்கான காலம் 3000 ஆண்டுகள் பழமையானவை. ஒரு காலத்தில் இப்பகுதி முழுவதும் பரவிக்கிடந்த இந்த வரலாற்றுச் சின்னங்கள் காலப்போக்கில் விவசாய விரிவாக்கம் மற்றும் நவீன குடியேற்றங்களால் சிதைக்கப்பட்டன. தற்போது புதர் மண்டிய பகுதிகளில் மட்டுமே ஒரு சில இடங்கள் உள்ளன. பல நெடுங்கற்கள் கால ஓட்டத்தில் மண்ணில் புதைந்துள்ளன. இந்த மண்ணின் மூதாதையர் வரலாற்றையும் வைகை ஆறு நாகரிகத்தின் வேர்களையும் வெளிப்படுத்தும் இந்த நினைவு சின்னங்களை அரசு மற்றும் தொல்லியல் துறை பாதுகாக்க வேண்டும். உள்ளூர் மக்களும் இதன் வரலாற்று முக்கியத்துவத்தை உணர்ந்து சிதைக்காமல் காக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.