கடகம் : தை ராசி பலன்
கடகம்: புனர்பூசம் 4 ம் பாதம்: நாளை வருவதை முன்னதாக அறிந்து செயல்படும் உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் நிதானமாக செயல்பட வேண்டிய மாதம். மாதம் முழுதும் குரு விரய ஸ்தானத்தில் வக்கிரமாக சஞ்சரிப்பதால் செலவு கூடுதலாகும். அலைச்சல் அதிகரிக்கும். எந்த ஒன்றையும் நினைத்த மாத்திரத்தில் முடிக்க முடியாமல் போகும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றம் ஏற்படும். அலுவலகத்தில் உடன் பணிபுரிவர் இடையே இணக்கமற்ற நிலை ஏற்படும். ஏதாவது ஒரு சங்கடம் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சிலர் சங்கடத்திற்கு ஆளாவர். யோசிக்காமல் சில வேலைகளில் ஈடுபட்டு அதனால் நெருக்கடி உண்டாகும். உங்கள் சகாய ஸ்தானதிபதி புதன் ஜன.29 முதல் 8ம் இடத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பார்த்த பணம் வரும். யோசிக்காமல் செய்த வேலைகளிலும் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் நிம்மதி நிலைக்கும். கலைஞர்களுக்கும், வியாபாரிகளுக்கும் இழுபறியாக இருந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். வங்கியில் கேட்டிருந்த கடன் கிடைக்கும். புதிய சொத்து வாங்கும் முயற்சி வெற்றியாகும். சிலர் குடியிருக்கும் இடத்தை மாற்றம் செய்வர். சொந்த வீட்டில் குடியேறும் வாய்ப்பும் சிலருக்கு உண்டாகும். தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பீர்கள். எதிர்காலத்தை எண்ணி புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். இழுபறியாக இருந்த வழக்கு, பிரச்னைகள் முடிவிற்கு வரும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை கூடும். மாணவர்களுக்கு படிப்பில் கூடுதல் அக்கறை கொள்வது நல்லது.
சந்திராஷ்டமம்: ஜன.21
அதிர்ஷ்ட நாள்: ஜன.20,29,30, பிப். 2,3,11,12
பரிகாரம்
வீரபத்திரரை வழிபட வாழ்வில் நன்மை உண்டாகும்.
பூசம்
நினைத்ததை சாதிப்பதில் வல்லவரான உங்களுக்கு, பிறக்கும் தை மாதம் கவனமாக செயல்பட வேண்டிய மாதமாகும். அஷ்டம ஸ்தானத்தில் ஆட்சியாக சஞ்சரிக்கும் சனியுடன் ராகுவும் கூட்டணி சேர்வதால் எல்லாவற்றிலும் தடை, தாமதம், சங்கடம் என்ற நிலை உண்டாகும். மனதில் இனம் புரியாத குழப்பமும், பயமும் ஏற்படும். சிலருக்கு உடல்நிலையில் பாதிப்பு உண்டாகும். சுய ஜாதகம் பலமாக இருப்பவர்களுக்கு, நன்மையான தசா புத்தி நடப்பவர்களுக்கு இத்தகைய சங்கடங்கள் ஏற்படாமல் போகும். பணியாளர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். வேலையின் காரணமாக குடும்பத்துடன் வெளியூர் சென்று வசிக்கும் நிலையும் சிலருக்கு ஏற்படும். சிலர் சொந்த வீட்டில் குடியேறுவர். பிப். 7 வரை சுக்கிரன் சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் எதிர்பாலினரால் உங்களுக்குள் தடுமாற்றம் ஏற்பட்டு அதனால் பிரச்னைக்கு ஆளாக நேரும். அதனால் விழிப்புடன் இருப்பது அவசியம். புதியவர்களை நம்பி எந்த வேலையிலும் இந்த நேரத்தில் ஈடுபட வேண்டாம். சப்தம ஸ்தானத்தில் பூர்வ புண்ணியாதிபதி செவ்வாய் உச்சமாக இருப்பதால் அசாத்திய துணிச்சல் உண்டாகும். புது இடம், வீடு வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றம் ஏற்படும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு எதிர்பார்த்த ஆதாயம் வரும். வங்கியில் கேட்டிருந்த பணம் கிடைக்கும். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதுடன் பண வரவும் இருக்கும். மாணவர்கள் படிப்பில் கூடுதல் முயற்சி மேற்கொள்ள வேண்டியிருக்கும். உறவுகளுக்கும், உங்களுக்கும் இணக்கம் உண்டாகும்.
சந்திராஷ்டமம்: ஜன.21, 22.
அதிர்ஷ்ட நாள்: ஜன.17, 20, 26, 29. பிப். 2, 8, 11.
பரிகாரம்
சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபமேற்ற நன்மை அதிகரிக்கும்.
ஆயில்யம்: சூழல் அறிந்து செயல்படும் உங்களுக்கு பிறக்கும் தை மாதத்தில் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். ஜன. 29 முதல் புதனின் சஞ்சாரம் சாதகமாக இருப்பதால் வியாபாரம், தொழில், வேலை, குடும்பத்தில் இருந்த சங்கடங்கள் விலகும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு மருத்துவத்தால் குணமாகும். அஷ்டமச்சனி, ராகுவின் நெருக்கடி உங்களை நெருங்காமல் போகும். சப்தம ஸ்தானத்தில் உச்சமாக சஞ்சரிக்கும் செவ்வாயும், உங்கள் தன குடும்பாதிபதி சூரியனும் உங்கள் விருப்பங்களை நிறைவேற்றுவர். எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும். புதிய இடம், வீடு, வாகனம் வாங்கும் முயற்சி வெற்றியாகும். தொழிலில் எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும். மற்றவரால் உதாசீனம் செய்யப்பட்ட நிலை மாறும். பிறர் பார்த்து வியக்கும் வகையில் உங்கள் முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும். அதே நேரத்தில் அந்நியரால் இந்த நேரத்தில் குடும்பத்திற்குள் பிரச்னை ஏற்பட வாய்ப்பிருப்பதால் புதிய நட்புகளிடம் எச்சரிக்கை அவசியம். யாராக இருந்தாலும் ஓரடி விலகி இருப்பது நல்லது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற வார்த்தைக்கேற்ப பொன், பொருள் சேரும். நீண்ட நாள் கனவு நனவாகும். விவசாயத்தில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். விளைபொருள் வீடு வந்து சேரும். எதிர்பார்த்த ஆதாயம் கிடைக்கும். இரண்டாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வதும், வார்த்தைகளில் கவனமாக இருப்பதும் நன்மையை ஏற்படுத்தும்.
சந்திராஷ்டமம்: ஜன.20, 23
அதிர்ஷ்ட நாள்: ஜன.20, 29. பிப். 2, 5, 11
பரிகாரம் மீனாட்சியம்மனை வழிபட சங்கடம் தீரும். நினைப்பது நடந்தேறும்.