மாசி மக திருவிழாவையொட்டி தேர் நிலைகளுக்கு சிறப்பு பூஜை
சேந்தமங்கலம்; சேந்தமங்கலத்தில், மாசி மக தேரோட்டம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதை முன்னிட்டு, பெருமாள் கோவில் உட்பிரகாரத்தில் உள்ள ஸ்ரீவிகன சேசனர் சுவாமிக்கு, நேற்று காலை சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இந்த பூஜையில் சேந்தமங்கலம், பொட்டனம், மின்னாம்பள்ளி, செல்லப்பம்பட்டி ஊர்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து, பெருமாள் கோவில் திடலில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, 2 தேர்களான வரதராஜ பெருமாள், சோமேஸ்வரர் தேர் நிலைகளுக்கு, கோவில் பட்டாச்சாரியார் சவுந்தரராஜன் பூஜை செய்தார். பூஜை முடிந்ததும், 2 தேர் நிலைகளிலும் முகூர்த்தகால் நடப்பட்டது. தொடர்ந்து பெருமாள் மற்றும் சோமேஷ்வரர் சுவாமிகளுக்கு திருமண நிகழ்ச்சி நடைபெறும் கேளிக்கை மண்டபத்தில், முகூர்த்த கால் நடப்பட்டது. கோவில் நிர்வாக அதிகாரி, மேற்பார்வையாளர் குமரேசன், முருகவேல், கேபிள் மாதேஸ்வரன், மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.