ஸ்ரீவில்லிபுத்துார் பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி
ஸ்ரீவில்லிபுத்துார்; விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் முதலியார் பட்டி தெரு பத்ர காளியம்மன் கோயிலில் நடந்த மகா சிவராத்திரி வழிபாட்டில், கொதிக்கும் நெய்யில் 93 வயது மூதாட்டி முத்தம்மாள் கையால் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று அம்மனை தரிசனம் செய்தனர்.
இக்கோயிலில் மகா சிவராத்திரியன்று கைகளால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுட்டு அம்மனுக்கு படைக்கும் நிகழ்வு நுாறாண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. அதன்படி நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு இரவு 11:30 மணிக்குமேல் கொதிக்கும் நெய்யில் கையால் அப்பம் சுடும் வழிபாடு துவங்கியது. இதில் 93 வயது மூதாட்டி முத்தம்மாள், அடுப்பில் கொதித்த நெய்யை எடுத்து திருநீருடன் கலந்து தன் நெற்றியிலும் பின்னர் பூசாரிகள், பக்தர்களுக்கும் பூசினார். பின் அம்மனை வணங்கி விறகு அடுப்பில் நெய் கொதித்த நிலையில் கருப்பட்டி, அரிசி மாவு கலந்த அப்ப உருண்டைகளை மிதக்க விட்டு அதனை கையால் எடுத்து பனை ஓலை பட்டியில் சேகரித்தார். அவருக்கு உதவியாக கோயில் பூசாரிகள் சுந்தர மகாலிங்கம், இருளப்பன், முருகன் உடனிருந்தனர். பின் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் அம்மனுக்கு அப்பங்கள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக அப்பங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி மதுரை, ஆண்டிபட்டி, சென்னை, பெங்களூர், டெல்லி உட்பட பல்வேறு நகரங்களில் வசிக்கும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.