திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் விடையாற்றி உற்சவம்
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் இன்று நான்காம் நாள் விடையாற்றி உத்சவம் நடந்தது.
செங்கை மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது. இங்கு அறுபடைவீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில் மூலவர் கந்தசுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.இக்கோவிலில் கந்தசஷ்டி, மாசி பிரம்மோத்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்கள் நடக்கின்றன. அந்த வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் பிரம்மோற்சவ பெருவிழா கடந்த பிப்., 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி, மார்ச் 5ம் தேதி திருக்கல்யாணம் வைபவத்துடன் விழா நிறைவடைந்தது. விழா நாட்களில் தினசரி காலை, மாலை வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில், முக்கிய விழாவாக, தேர்த்திருவிழா, தெப்பதிருவிழா, திருக்கல்யாண உற்சவம் நடந்து முடிந்தது. திருக்கல்யாணம் உற்சவம் நிறைவடைந்த அன்றிலிருந்து 13 நாட்களுக்கு, விடையாற்றி உற்சவம் நடைபெறுவது வழக்கம். நான்காம் நாள் உற்சவம் இன்று நடந்தது. பகல் 11:00 மணிக்கு உற்சவர் கந்தசுவாமி பெருமானுக்கு மஹா அபிஷேகமும், பகல் 12:00 மணிக்கு அன்னதானமும் நடந்தது. தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு மஹா தீபாராதனையும், அர்ச்சனையும் நடந்தது.விழாவில் பனை அட்சய பாத்திரம் என அமைக்கப்பட்ட பழமைத்தோற்றத்தை தெரிவிக்கும் வகையில், கந்தபெருமான் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.