மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் ஊஞ்சல் உற்சவம்: மழையிலும் குவிந்த பக்தர்கள்
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கொட்டும் மழையிலும் கலையாமல் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று இரவு பங்குனி மாத அமாவாசை ஊஞ்சல் உற்சவம் நடந்தது. அதை முன்னிட்டு காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தங்க காப்பு அலங்காரம் செய்தனர். இரவு 11.10 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன் ஊஞ்சல் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் உற்சவம் துவங்கியது. ஊஞ்சல் தாலாட்டின் போது கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களும், கோவில் பூசாரிகளும் அம்மன் தாலாட்டு பாடல்களை பாடினர். ஏராளமான பக்தர்கள் சாமி வந்து ஆடினர். பக்தர்கள் கற்பூர தீபமேற்றி வழிபட்டனர். இரவு 12.30 மணிக்கு மகா தீபாரதனையுடன் ஊஞ்சல் உற்சவம் நிறைவடைந்தது. உற்சவத்தின் போது தொடர்ந்து மழை பொழிந்தது, மழையையும் பொருட்படுத்தாமல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திறந்த வெளியில் நின்றபடி சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சிவலிங்கம், உதவி ஆணையர் சக்திவேல், அறங்காவலர் குழு தலைவர் ஏழுமலை மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர். செஞ்சி டி.எஸ்.பி., ரமேஷ்ராஜ் மேற்பார்வையில் 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். சென்னை, கடலூர், வேலூர் உட்பட பல்வேறு ஊர்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.