உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமர் ஏன் நவமியில் அவதரித்தார்?; ராமநவமி விரதமுறையும் பலனும்!

ராமர் ஏன் நவமியில் அவதரித்தார்?; ராமநவமி விரதமுறையும் பலனும்!

மனிதர்கள் எவ்வாறு வாழ வேண்டும் என்பதை உணர்த்துவதற்காக, பகவான் மகாவிஷ்ணு எடுத்த உன்னதமான அவதாரம் ராமாவதாரம். சித்திரை வளர்பிறை நவமியன்று இவர் அவதரித்தார். சில ஆண்டுகளில் இந்த விழா, பங்குனி மாதத்திலும் வரும். தசரதரின் மகனாகப் பிறந்த  ராமன், தந்தையின் சொல் கேட்டு அவர் சொன்ன ஒரு வார்த்தைக்காக, காட்டிற்குச் சென்றார். 14 ஆண்டுகள் வனவாசம் இருந்தார். இவ்வேளையில்  சீதையையும் பிரிந்தார். ஏகபத்தினி விரதனாக இருந்த ராமபிரானின் வாழ்க்கை, மனிதர்களுக்கு பல அரிய வாழ்க்கை முறைகளை போதிக்கிறது.  ராமன் காட்டிய அயணம் (பாதை) என்பதால்தான், இவரது வரலாற்று நூல் ராமாயணம் எனப் பெயர் பெற்றது.


மகாவிஷ்ணு எடுத்த அவதாரங்களுள் ராம அவதாரமே போற்றிப் புகழப்படுகிறது. தாரக மந்திரத்தினை தனதாகக் கொண்ட அவதாரம் அது. இறைவன் தனது அத்தனை வல்லமையையும் துறந்து சாதாரண மானிடனாக, பெற்றோருக்கு மகனாக வாழ்ந்து காட்டிய அவதாரம் ராமாவதாரம். பகவான் மானிடராக அவதரித்தது மொத்தம் மூன்று முறை. வாமனம், ராமர் மற்றும் கிருஷ்ணர். இவற்றில் ராமாவதாரம் தவிர மற்ற இரு அவதாரங்களிலும் தனது கடவுள் தன்மையை வெளிப்படுத்தி இருக்கிறார் பகவான். ஆனால், ராமாவதாரத்தில் மட்டுமே அடுத்து என்ன நடக்கும் என்று அறியாதவரைப் போல் எளிய வாழ்வு வாழ்ந்து காட்டினார். அதனாலேயேதான் ராமாவதாரம் சிறப்புப் பெற்றதாக ஆகிறது.


வழிபடும் முறை: ராமநவமி நாளில் ராமர் கோயில்களுக்குச் சென்று, அவருக்கு துளசி அர்ச்சனை செய்து வழிபடலாம். பெருமாள் கோயி ல்களுக்கும் சென்று, சுவாமியை வணங்கி வரலாம். அன்று முழுதும் ராமபிரானை எண்ணிக்கொண்ட ஸ்ரீராமஜெயம் என்னும் ராம மந்திரம்  உச்சரிக்கலாம்.


நவமி ஏன்?: ஒருசமயம் அஷ்டமி, நவமி திதிகளின் தேவதைகள் கவலையில் ஆழ்ந்திருந்தன. பதினாறு திதிகளில் தங்களை மட்டுமே விலக்கி வைத்து எந்தக் காரியத்துக்கும் தங்களை எவரும் தேர்ந்தெடுக்காமலிருந்த ஏக்கம் அவைகளைப் பீடித்திருந்தது, பெருமாளிடமே சென்று முறையிட்டன. திதிகளின் ஏக்கம் தீர்க்க எண்ணிய தீனதயாளன், இனி வரும் எனது இரு அவதாரங்களும் நவமியிலும், அஷ்டமியிலுமே நிகழும். அதனால் உங்கள் இருவரையும் மக்கள் போற்றித் துதித்து மகிழ்வார்கள் என்று வரமளித்தார். அதனால்தான் ராம அவதாரம் நவமியிலும் கிருஷ்ண அவதாரம் அஷ்டமியிலும் நிகழ்ந்தன.


ராம நாம மகிமை: ராமபிரானாலேயே சிறந்த பக்தன் என்று போற்றப்பட்ட அனுமனுக்கு வாக்கு, வன்மை, வீரம், சாதுரியம் என அனைத்துமே ராமநாமத்தின் மகிமையால்தான் வந்தது என்று கூறலாம். கடல்தாண்டிச் சென்ற அனுமனை சிம்ஹிகை எனும் அரக்கி வழிமறித்தபோது, சிறிய உரு எடுத்து அவள் வாய்க்குள் புகுந்து வெளியேறிச் செல்ல அனுமனுக்கு உதவியது ராமநாமம்தான். அவ்வளவு ஏன், ராமரே அருகில் இருந்தபோதும், அவரது திருநாமத்தின் மகிமையால்தானே பெரும்பாறைகளையும் கடலில் மிதக்கச் செய்து பாலம் அமைத்தார்கள் வானர வீரர்கள்!


ராமநவமி, பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமி திதியில் அமைகிறது. ராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின. அதனால் ராமசந்திரனின் ஜாதகத்தை வீட்டில் வைத்து பூஜித்தால் நன்மை பயக்கும் என்பது ஐதீகம். 


ராம நவமி விரதம் இருக்கும்முறை: மனதில் இன்ன காரணத்துக்காக விரதம் இருக்கிறேன். அதனை நல்லபடியாக முடித்துக் கொடு ராமா! என்று வேண்டிக்கொண்டு இந்த விரதத்தை ஆரம்பிக்கவேண்டும். அவரவர் வசதிப்படி கர்ப்பக்கால விரதம் அல்லது ஜனனகால விரதம் இரண்டில் ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். எதை தேர்ந்தெடுத்தாலும் ஒன்பது நாட்கள் தொடர்ந்து அனுசரிப்பதே சிறந்தது. கர்ப்பக்கால விரதம் எடுப்பவர்கள். ராமநவமி வருவதற்கு முந்தைய அமாவாசை அன்றிலிருந்து விரதத்தைத் தொடங்க வேண்டும். நீராடி ராமர் படத்துக்குப் பூவும் பொட்டு வைத்து வணங்கவேண்டும். குறைந்தது 108 முறை ஸ்ரீராமஜெயராம ஜெய ஜெய ராம என்று மனதார உச்சரிக்கவேண்டும்.


பலன்: ராமபிரானை வழிபடுவதால் துன்பத்தில் கலங்காத மனநிலையும், எடுத்த செயல்களில் வெற்றியும் கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !