மங்கலம்பேட்டையில் ராமநவமி ஊர்வலம்: பக்தர்கள் வழிபாடு
விருத்தாசலம்: மங்கலம்பேட்டையில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டை, ஸ்ரீபஜ்ரங்கி சேவாலயா டிரஸ்ட் சார்பில், பட்டாபிராமர் கோவிலில் இன்று காலை ராமநவமி சிறப்பு வழிபாடு நடந்தது. பகல் 12:00 மணியளவில் ஸ்ரீராமர், லட்சுமணர், சீதாதேவி உற்சவர்கள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். இந்து முன்னணி ஒன்றிய அமைப்பாளர் கமலக்கண்ணன் தலைமையில் ராமநவமி ஊர்வலத்தை விழுப்புரம் தெற்கு மாவட்ட பா.ஜ., செயலாளர் பத்ரிநாராயணன் கொடியசைத்து, துவக்கி வைத்தார். மங்கலம்பேட்டை சுமைதாங்கி, வாணியர் வீதி, சுப்ரமணியர் கோவில் தெரு, நெசவாளர் வீதி மற்றும் கடைவீதி உட்பட முக்கிய வீதிகள் வழியாக சுவாமி ஊர்வலம் நடந்தது. இந்து முன்னணி மாவட்ட பொறுப்பாளர் வேல்முருகன், பா.ஜ., பிரசார பிரிவு மாநில செயலாளர் ராஜேந்திரன், நிர்வாகிகள் வாசுதேவன், பரமசிவம், சிபி, யோகேந்திரன் உட்பட இந்து முன்னணி நிர்வாகிகள் கோஷமிட்டபடி ஊர்வலமாக வந்தனர். எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையில் டி.எஸ்.பி.,க்கள் பாலகிருஷ்ணன், ராஜா உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.