காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா
காரமடை: காரமடையில் ஸ்ரீ சீதாராம பாத சேவா அறக்கட்டளை சார்பில் ஸ்ரீ ராம நவமி விழா இனிதே நடந்தது.
காரமடை அருகே மருதூர் கிராமம் செல்லப்பனூரில், ஸ்ரீ சீதா சமேத, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி திருக்கோவில் உள்ளது. இங்கு, ஸ்ரீ சீதாராம பாத சேவா சார்பில் ஸ்ரீ ராம நவமி சிறப்பு பூஜையும், ஸ்ரீ சுதர்சன மகா ஹோமமும் நடைபெற்றது. முன்னதாக காலை மூலவருக்கும், உற்சவமூர்த்திகளுக்கும், சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. இதில் தேன், பால், தயிர், இளநீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் உடன் திருமஞ்சனம் நடந்தது. அதனை தொடர்ந்து மகா சுதர்சன ஹோமம், மகா சங்கல்பம், மஹா தீபாராதனை பக்தி சொற்பொழிவு மற்றும் அன்னதானம் நடைபெற்றது. தொடர்ந்து கோவை கருணாஸ் பக்தி இசை கச்சேரி மாலை வரை நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஸ்தாபகர் மற்றும் ஸ்தானிகர் சூரிய நாராயண ஐயங்கார் பூஜைகள் மேற்கொண்டார். மேலும் திருக்கோவில் நிர்வாக தலைவர் கணேசன், தர்மகர்த்தா துரைசாமி, நிர்வாக அறங்காவலர் காமராஜ், செயலாளர் ராஜ்குமார், பொருளாளர் கார்த்திக் மற்றும் நிர்வாகிகள் உபயதாரர்கள், பக்தர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.