திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் பங்குனி திருக்கல்யாணம்
திருப்புவனம்: திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் -சவுந்தரநாயகி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று திருக்கல்யாணம் நடந்தது.
திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் ஒவ்வொரு வருடமும் பத்து நாட்கள் பங்குனி திருவிழா நடைபெறும், தினசரி அம்மனும், சுவாமியும் வீதியுலா வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள், இந்தாண்டு பங்குனி திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை அம்மனும் சுவாமியும் அலங்கரிக்கப்பட்ட திருக்கல்யாண மண்டபத்தில் காலை 10:30 மணிக்கு எழுந்தருளினர். அம்மனுக்கும் சுவாமிக்கும் பட்டு சேலை, பட்டு வேட்டி அணிவிக்கப்பட்டது. அம்மன் சார்பாக விக்னேஷ் பட்டரும், சுவாமி சார்பாக சுந்தர கண்ணன் பட்டரும் மாலை மாற்றி கொண்டனர். மதியம் 12:00 மணிக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடந்தது. திருக்கல்யாண உற்ஸவத்தை அடுத்து தீபாராதனை காட்டப்பட்டது. திருக்கல்யாண உற்ஸவத்தை தெய்வசிகாமணி பட்டர் தலைமையில் நடத்தி வைத்தார். திருக்கல்யாண உற்ஸவத்தை அடுத்து திருமணமான பெண்கள் திருமாங்கல்ய கயிறு புதிதாக மாற்றி கொண்டனர். இன்று காலை எட்டு மணிக்கு மேல் தேரோட்டம் நடைபெற உள்ளது.