ரிஷிவந்தியம் சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருக்கல்யாணம்
ரிஷிவந்தியம்: சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தையொட்டி சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
ரிஷிவந்தியம் அடுத்த சூளாங்குறிச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகளும், கோவில் உட்பிரகாரம் வழியாக சுவாமி உலா நடந்தது. நேற்று முன்தினம் காலை பால்குட ஊர்வலம் நடந்தது. அதைத் தொடர்ந்து, விநாயகர் மற்றும் மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு வெள்ளி கவசம் அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, உற்சவர் விநாயகர் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணிய சுவாமியை மணமேடையில் எழுந்தருள செய்தனர். கங்கனம் கட்டுதல், சங்கல்பம், திருமாங்கல்யம் அணிவித்தல் மற்றும் மாலை மாற்றுதலுடன், திருக்கல்யாணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர். இன்று காவடி எடுத்தல் மற்றும் அலகுபோடுதல் விழா நடக்கிறது.