உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரிய வியாழன் தின ஆசரிப்பு: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற கால் கழுவும் சடங்கு

பெரிய வியாழன் தின ஆசரிப்பு: பக்தி பரவசத்துடன் நடைபெற்ற கால் கழுவும் சடங்கு

பாலக்காடு: புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான பெசஹா திருநாளை (பெரிய வியாழன்) முன்னிட்டு, பாலக்காடு மாவட்டம் ஸ்ரீகிருஷ்ணபுரம் செயின்ட் ஜோசப் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனைகளும், கால் கழுவும் சடங்கும் பக்தி உணர்வுடன் நடைபெற்றது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக தனது சீடர்களுடன் அருந்திய இறுதி விருந்தை நினைவு கூரும் வகையில் இந்த நாள் ஆசரிக்கப்படுகிறது. இதையொட்டி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு புனித திருப்பலிக்கு இடவகை விகார் பாதிரியார் வின்சென்ட் ஒல்லூக்காரன் தலைமை தாங்கினார்.


மனிதாபிமானத்தையும் பணிவையும் போதிக்கும் வகையில், இயேசு தனது சீடர்களின் பாதங்களைக் கழுவியதை நினைவுகூர்ந்து, தேவாலயத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களின் பாதங்களை பாதிரியார் வின்சென்ட் ஒல்லூக்காரன் கழுவி முத்தமிட்டார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்துகொண்டு பிரார்த்தனை செய்தனர். தேவாலய நிகழ்வுகளைத் தொடர்ந்து, கிறிஸ்துவர்களின் வீடுகளில் பெசஹா அப்பம் முறிக்கும் பாரம்பரிய சடங்குகளும் நடைபெற்றன. புனித வாரத்தின் தொடர்ச்சியாக நாளை இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் துக்க வெள்ளி ஆசரிக்கப்படுகிறது. வரும் ஞாயிற்றுக்கிழமை இயேசு உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் (உயிர்ப்புப் பெருவிழா) கோலாகலமாகக் கொண்டாடப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !