பங்குனி உத்திரம்: வடபழனி முருகன் கோவிலில் அரோகரா கோஷத்துடன் அலைமோதும் பக்தர்கள்
சென்னை, வடபழனி, முருகன் கோவிலில் பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
வடபழனி முருகன் கோவிலில், பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு, கடந்த, 29ம் தேதி லட்சார்ச்சனை துவங்கியது. மூன்று நாட்கள் நடந்த இந்த லட்சார்ச்சனையில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். தொடர்ந்து, பங்குனி உத்திரமான இன்று காலை தீர்த்தவாரி நடைபெற்றது. பின், யாகசாலை பூஜை செய்து, கலாபிஷேகத்துடன் பூஜைகள் பூர்த்தி செய்யப்பட்டது. பங்குனி உத்திர விழாவை முன்னிட்டு அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. காவடி, பால்குடம் எடுத்தும், தீபம் ஏற்றியும் பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். அதிகமான பக்தர்கள் குவிந்ததால், நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
மூலவருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, இரவு, வடபழனி ஆண்டவர் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி விதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பங்குனி உத்திர விழாவையொட்டி, நாளை முதல், 4ம் தேதி வரை மூன்று நாட்கள் இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரம், வேதபாராயணம், திருமுறை மற்றும் நாதஸ்வர கச்சேரியுடன் நடக்கிறது. நாளைய தெப்பத்தில் வடபழனி ஆண்டவர் புறப்பாடு நடக்கிறது. இரண்டாம் நாள் சண்முகர், வள்ளி, தெய்வானை புறப்பாடும், மூன்றாம் நாள் சுப்பிரமணியர் வள்ளி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. அதேபோல் சென்னை, புறநகரில் உள்ள முருகன் கோவில்களில் பங்குனி உத்திர திருவிழாவிற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.