திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம்
மயிலாடுதுறை: திருஇந்தளூர் பரிமள ரங்கநாதர் கோவில் பங்குனி உத்திர தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது.
மயிலாடுதுறை திரு இந்தளூரில் 108 திவ்ய தேசங்களில் 22 ஆவது ஸ்தலமான பரிமள ரங்கநாதர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச அரங்க சேத்திரங்களில் 5வது தலமான இக்கோவில் திருமங்கை ஆழ்வாரால் மங்களா சாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 10 நாட்களுக்கு பங்குனி உத்திரப் பெருவிழா நடைபெறும். இவ்வாண்டு பங்குனி உத்தரவு திருவிழா கடந்த 24 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9 ஆம் நாள் திருவிழாவான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தாயார் சமேதராய் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள பட்டாச்சாரியார்கள் மகா தீபாராதனை காண்பித்தனர். தொடர்ந்து திரளான பக்தர்கள் ரங்கநாதா ரங்கநாதா என கோஷமிட்டபடி வடம் பிடித்து இழுக்க தேர் நான்கு வீதிகளையும் வலம் வந்தது. வழிநெடுக்கிலும் பக்தர்கள் பெருமாளுக்கு அர்ச்சனைகள் செய்தும் மற்றும் ஆரத்தி எடுத்தும் வழிபாடு நடத்தினர். மதியம் 1:30 மணிக்கு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரியும், மாலை 5 மணிக்கு பெருமாள் தாயார் திருமஞ்சனமும், இரவு 7 மணிக்கு பெருமாள் தாயார் சேத்தி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரம்யா தலைமையிலான கோயில் ஊழியர்கள் செய்திருந்தனர்.