உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெருமாள் கோவிலை சீரமைக்க தொல்லியல் துறை அலட்சியம் பக்தர்கள் அதிருப்தி

பெருமாள் கோவிலை சீரமைக்க தொல்லியல் துறை அலட்சியம் பக்தர்கள் அதிருப்தி

திருவாலங்காடு: பாகசாலை ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க, தொல்லியல் துறை அலட்சியம் காட்டி வருவதால், பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.


திருவாலங்காடு ஒன்றியம் பாகசாலையில், கொசஸ்தலை ஆற்றங்கரையில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. சோழர் காலத்தில், 1,300 ஆண்டுகளுக்கு முன் இக்கோவில் கட்டப்பட்டதாக வரலாறு கூறுகிறது. திருவள்ளூரில் அமைந்துள்ள வீரராகவ பெருமாளுக்கு, இக்கோவிலில் பிரம்மோத்சவத்தன்று அபிஷேகம் செய்யப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோவில், 200 ஆண்டுகளாக பாழடைந்த நிலையில் உள்ளது. இக்கோவிலை சீரமைக்க, ஊர் மக்கள் சார்பில் திருப்பணி கமிட்டி அமைத்தும் பலன் அளிக்கவில்லை. இதுகுறித்து, நம் நாளிதழில், கடந்த ஆகஸ்ட் மாதம் செய்தி வெளியானதை அடுத்து, திருவள்ளூர் தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்தனர். பின், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல், ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், பெருமாள் பக்தர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே, ‌பழமை வாய்ந்த ஆதிகேசவ பெருமாள் கோவிலை சீரமைக்க, தொல்லியல் துறை முன்வர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !