தமிழகம், கேரளத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும்: சுந்தர வடிவேல் சுவாமிகள் கணிப்பு
கூடலுார்: தமிழகம், கேரளத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என லோயர்கேம்ப் விஸ்வ ஜோதி ஆசிரம நிர்வாகி சுந்தரவடிவேல் சுவாமி தெரிவித்தார்.
தேனி மாவட்டம் கூடலுார் குருவனத்துப்பாலம் அருகே முல்லைப் பெரியாற்றின் கரையோரப் பகுதியில் 35 ஆண்டுகளாக விஸ்வ ஜோதி ஆசிரமம் நடத்தி வருபவர் சுந்தரவடிவேல் சுவாமி. இவர் செய்தியாளர்களிடம் கூறும்போது:
தி.மு.க., இனிமேல் வெற்றி பெறுவது கடினம். இரு மொழி கொள்கை எனக் கூறி தி.மு.க., காங்., கட்சிகள் நாட்டை ஏமாற்றி வருகிறது. பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு மத்தியில் தொடர்ந்து 3 முறை பா.ஜ., ஆட்சி அமைக்கும் என கொடைக்கானல் அருகே யாகம் நடத்தி தெரிவித்திருந்தேன். அதேபோல் மூன்றாவது முறையாக பா.ஜ.,ஆட்சிக்கு வந்தது. மேலும் 2 முறை பா.ஜ., ஆட்சி செய்யும். டாக்டர் அம்பேத்கர் இந்தியாவின் பொதுச்சொத்து. அவரை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. தி.மு.க. தீய சக்திகளை வளர்த்து விடுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் தி.மு.க. பெரும் பின்னடைவை சந்திக்கும். கேரளா, தமிழகத்தில் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். அந்த மாற்றத்திற்கு பின்னால் இந்திய கலாச்சாரம், இந்திய இறையாண்மை, மத கலாச்சாரங்கள், மக்கள் ஒற்றுமை, மக்கள் எழுச்சி ஏற்படும். 2021 சட்டசபை தேர்தல் நேரத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தி.மு.க.,வின் கைக்கூலி ஓ பன்னீர்செல்வம் என்றேன். தற்போது அது உண்மையாகி விட்டது, சசிகலா இனி அரசியலில் வந்து வெற்றி பெறுவது கடினம். விஜயின் த.வெ.க., வளர்ந்து வருகிறது. தற்போது கூடுதல் இடங்களில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்ற போதிலும் அடுத்த சட்டசபை தேர்தலில் வாய்ப்பு பிரகாசமாக இருக்கும். அ.தி.மு.க., தி.மு.க., கட்சிகளில் அமைச்சராக இருப்பவர்களே மீண்டும் அமைச்சராக வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். இளைஞர்களுக்கு வாய்ப்பு அதிகம் வழங்குவதில்லை. இனிவரும் காலங்களில் ஜாதியின் பெயரால் கட்சி ஆரம்பிப்பது தடுக்கப்பட வேண்டும், என்றார்.