உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் பரவசம்

உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் கோலாகலம்: ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் பரவசம்

உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர்.


உடுமலை நகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திரு விழாவுக்கு, மார்ச் 24ல், நோன்பு சாட்டப்பட்டது. இதையடுத்து பக் தர்கள் விரதம் துவக்கினர். கடந்த 3ம் தேதி கொடியேற்றம் நடைபெற்ற பிறகு, பக்தர்கள் பூவோடு எடுக்கத் துவங்கினர். கோவிலில், திருக்கம்பம் மார்ச் 31ல் நடப்பட்டது. திருக்கம்பத்துக்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வந்து செலுத்தி, வழிபாடு செய்து வருகின்றனர். தீர்த்த குடங்களில் வேப்பிலை சொருகி, மஞ்சளிட்டு கொண்டு வந்து திருக்கம்பத்துக்கு ஊற்றி வருகின்றனர். நகரின் ஒவ்வொரு குடியிருப்பில் இருந்தும், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஊர்வலமாக பக்தர்கள் தீர்த்தம் எடுத்து வருவதால், நகரே திருவிழா கோலம் பூண்டுள்ளது. நாள்தோறும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்று வந்தது.


நேற்று 8ம் தேதி அதிகாலை மாவிளக்கு எடுத்தல் நடைபெற்றது. தொடர்ந்து மாலை அம்மன் திருக்கல்யாணம் சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று 9ம் தேதி மாலை, 4:15 மணிக்கு துவங்கியது. ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து வழிபட்டனர். நாளை 10ம் தேதி காலை ஊஞ்சல் உற்சவம், இரவு, 7:00 மணிக்கு, அம்மன் பரிவேட்டையும், இரவு, 10:00 மணிக்கு வாண வேடிக்கையும் நடக்கிறது. திருவிழாவையொட்டி குட்டை திடலில் அமைக்கப்பட்டுள்ள ராட்டினம் உள்ளிட்ட பொழுதுபோக்கு விளையாட்டுகளை ஆடி மகிழ்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !