உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 1 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்:

மே 1 அதிகாலை வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்:

பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் திருக்கோலத்தில் பெருமாள் வைகை ஆற்றில் இறங்க உள்ளார்.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் சவுந்தரவல்லி தாயார், சுந்தரராஜ பெருமாள் கோயில் உள்ளது. கோயிலில் மதுரை அழகர் கோயிலுக்கு இணையாக ஆண்டுதோறும் அனைத்து வைபவங்களும் நடக்கிறது. இந்த ஆண்டு கோடைத்திருநாள் எனும் சித்திரைத் திருவிழா ஏப்., 26 காலை 9:30 மணிக்கு காப்பு கட்டுதலுடன் ஆரம்பம் ஆகிறது. அன்று தொடங்கி தினமும் யாகசாலை பூஜைகள் மற்றும் இரவு பெருமாள் ஆடி வீதி வலம் வந்து தீபாராதனைகள் நடக்கும். ஏப்., 30 காலை 9:00 மணிக்கு கும்பத் திருமஞ்சனம் நடக்கிறது. அன்று நள்ளிரவு 2:00 மணிக்கு மேல் பெருமாள் கோடாரி கொண்டையிட்டு, ஈட்டி, வளரி, கத்தி, கேடயம், தடி ஏந்தி தங்க நெல்மணி தோரணங்கள் சூடி, பூ பல்லக்கில் மே 1 அதிகாலை 4:00 மணிக்கு வைகை ஆற்றில் இறங்க உள்ளார். 


அன்று காலை 9:30 மணிக்கு அழகர் குதிரை வாகனத்தில் அலங்காரமாகி ஆயிரக்கணக்கான பக்தர்கள் துருத்தி எனும் பீச்சாங்குழல் மூலம் பெருமாளை மஞ்சள் நீரை பீய்ச்சி அடித்து வரவேற்கும் நிகழ்வு நடக்கிறது. மே 2 மண்டூக மகரிஷி சாப விமோசனம் அளித்து, தசாவதார திருக்கோலம் காண்கிறார். மே 3 கருட வாகனம், மே 4 ராஜாங்க திருக்கோலம் பூண்டு வைகையில் வலம் வருகிறார். மே 5 காலை மீண்டும் கள்ளழகர் திருக்கோலத்துடன் பூ பல்லக்கில் நகர் வலம் வந்து மாலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைவார். ஏற்பாடுகளை தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !