காரமடையில் ஸ்ரீ ராம நவமி விழா: வீதி உலா வந்து அருள்பாலித்த ரங்கநாதர்
ADDED :1 days ago
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் சிறப்பாக நடந்தது. காலை மூலவருக்கு சிறப்பு திருமஞ்சனம், காலசந்தி பூஜை முடிந்து ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் ரங்கநாதர் வெள்ளி சப்பரத்தில் பட்டு குடை சூழ மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகளில் உலா வந்து சன்னதி அடைந்தார். பின்னர் திருவாராதனம், அஷ்டோத்திரம், முடிந்து திவ்ய பிரபந்தத்தில் குலசேகர பெருமாள் அருளிச்செய்த பெருமாள் திருமொழியில் உள்ள பாசுரங்களை ஸ்தலத்தார்கள் ஸ்ரீ வேதவியா பட்டர் திருமலை நாலான் சக்கரவர்த்தி ஆகியோர் சேவித்தனர். தொடர்ந்து உச்சிக்கால பூஜை சாற்று முறை மகா தீப ஆராதனை நடைபெற்று வைபவம் முடிந்தது. இந்த வைபவத்தில் அர்ச்சகர்கள் மிராசுதாரர்கள் திருக்கோவில் அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.