நாகபூண்டி நகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
ஆர்.கே.பேட்டை: சித்திரை பிரம்மோத்சவத்தை ஒட்டி இன்று பெரிய நாகபூண்டி நகேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆர்.கே.பேட்டை அடுத்த பெரிய நாகபூண்டியில் நாகவல்லி சமேத நாகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராகு பரிகார தலமான இக்கோவிலுக்கு, ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். நாகேஸ்வரர் கோவிலில் பிரம்மோத்சவ விழா, கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்றிரவு 7:00 மணிக்கு அம்ச வாகனத்தில் உற்சவர் வீதியுலா வந்தார். அதை தொடர்ந்து, தினசரி சிம்மம், பூத வாகனம் என, பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா வந்தார். பிரம்மோத்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. காலை 8:00 மணிக்கு நாகவல்லி சமேத நாகேஸ்வரர் தேரில் எழுந்தருளினார். திரளான பக்தர்கள், தேரை வடம்பிடித்து இழுத்தனர். இன்று இரவு திருக்கல்யாணம் நடைபெற உள்ளது. வரும் 5ம் தேதி கேடய உத்சவத்துடன் பிரம்மோத்சவம் நிறைவு பெறுகிறது.