மானாமதுரையில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற தேரோட்டம்
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் 70 வருடங்களுக்குப் பிறகு போதிய திட்டமிடல் இல்லாமல் தேரோட்டம் மிகவும் தாமதமாக நடைபெற்றதால் பக்தர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாகினர்.
சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்துக்கு உட்பட்ட மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் கடந்த 21ம் தேதி கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது தினந்தோறும் அம்மனும்,சுவாமியும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தனர்.கடந்த 28ம் தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று கடந்த 70 வருடங்களுக்கு பிறகு பிரியாவிடையுடன் சோமநாதர் சுவாமி புதிதாக செய்யப்பட்ட பெரிய தேரிலும், பழைய பெரிய தேரில் ஆனந்தவல்லி அம்மனும் தனித்தனியாக எழுந்தருளி இன்று தேரோட்டம் நடைபெற்றது. 70 வருடங்களுக்குப் பிறகு 2 பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற்ற நிலையில் போதிய திட்டமிடல் இல்லாததால் காலை 9:40 மணிக்கு மேல் சுவாமி தேர் முதலில் கிளம்பியது. இதற்குப் பிறகு பழைய பெரிய தேரில் ஆனந்தவல்லி அம்மன் எழுந்தருளிய நிலையில் அத்தேர் கிளம்புவதற்கு மிகவும் தாமதமாகியது. அதற்குள் சோமநாதர் சுவாமி சென்ற புதிய தேர் தெற்கு ரத வீதியின் கடைசியில் சென்றது. பின்னால் ஆனந்தவல்லி அம்மன் தேர் வராததை தொடர்ந்து சோமநாதர் சுவாமி தேரை இழுத்த பக்தர்கள் சென்று ஆனந்தவல்லி அம்மன் தேரையும் இழுத்து வந்தனர். இதேபோன்று தேர் நிலையை அடையும் வரை மாறி,மாறி பக்தர்கள் தேர்களை இழுத்து வந்தனர். இதனால் ஒன்றன்பின் ஒன்றாக தேர்கள் வராமல் மிகவும் தாமதமாக சுற்றி வந்து தேர்கள் நிலையை அடைந்ததால் பக்தர்கள் மிகுந்த வேதனையில் உள்ளனர்.
இது குறித்து பக்தர்கள் கூறியதாவது: மானாமதுரையில் 70 வருடங்களுக்குப் பிறகு 2 பெரிய தேர்களில் தேரோட்டம் நடைபெற்றது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. தேரோட்டத்திற்கு முன்பாக போதிய திட்டமிடல் இல்லாததால் தேர்கள் ஒன்றன்பின் ஒன்றாக நிற்காமல் சுற்றி வராமல் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மிகவும் தாமதமாக நிலையை அடைந்தது. கடந்த வருடங்களில் நடைபெற்ற தேரோட்டத்தின் போது தேரோட்டம் ஆரம்பித்து 1மணி நேரத்துக்குள்ளாகவே தேர் நிலைக்கு வந்துவிடும். ஆனால் இந்த வருடம் 4 மணி நேரம் தாமதமாக தேர்கள் நிலையை அடைந்துள்ளது.இனி வரவுள்ள திருவிழாக்களின் போது கோடை வெயிலை கருத்தில் கொண்டு மதுரையைப் போல அதிகாலையிலேயே மானாமதுரையிலும் தேரோட்டத்தை துவங்க வேண்டும், தேர்கள் ஒரே இடத்தில் நிற்காமல் ஒன்றன்பின் ஒன்றாக செல்வதற்கு முன்கூட்டியே திட்டமிட வேண்டும் என்றனர்.