திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை தேரோட்டம்
திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. திருவாடானை அருகே திருவெற்றியூரில் சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான பாகம்பிரியாள் உடனுறை வல்மீகநாதர் கோயில் உள்ளது. இக்கோயில் சித்திரை திருவிழா ஏப்.,21ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக இன்று தேரோட்டம் நடந்தது. காலை 8:30 மணிக்கு வல்மீகநாதர் பிரியாவிடையுடனும், பாகம்பிரியாள் அம்மன் தனித்தேரிலும் எழுந்தருளினர். முன்னதாக சிவாச்சாரியார்கள் மணிகண்டன் குருக்கள், வல்மீகநாதன் குருக்கள் தலைமையில் தீபாராதனை நடந்தது. 2 தேர்களையும் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். 11:00 மணிக்கு அம்மன் கோயில் வாசல் முன்பு இரு தேர்களும் நிறுத்தப்பட்டன. பின்னர் மீண்டும் 4:00 மணிக்கு துவங்கி மாலை 6:00 மணிக்கு நிலைக்கு சென்றது. தேவஸ்தான கண்காணிப்பாளர் செந்தில்குமார், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன், சரக ஆய்வாளர் கண்ணன் மற்றும் திருவெற்றியூர் கிராமத்தார்கள் கலந்து கொண்டனர்.