மதுரை கள்ளழகருக்கு ஸ்ரீவில்லிபுத்துாரில் இருந்து வரும் ஆண்டாள் சூடி களைந்த மாலை
ஸ்ரீவில்லிபுத்துார்: மதுரையில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மே 1ல் வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகர் சூடிக்கொள்ள ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சூடி களைந்த மாலை, கிளி, பட்டு மற்றும் மங்கலப் பொருட்கள் இன்று ஆண்டாள் கோயிலில் இருந்து மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனை முன்னிட்டு இன்று மதியம் 01:35 மணிக்கு வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பின்னர் மாலை, கிளி, பட்டு, மங்கல பொருட்களை ஒரு கூடையில் வைத்து ஸ்தானிகம் கோவிந்தராஜ் தலைமையில் கோயில் மாட வீதிகள் சுற்றி வந்து கார் மூலம் மதுரை கொண்டு செல்லப்பட்டது. விழாவில் செயல் அலுவலர் சக்கரையம்மாள், கோயில் பட்டர்கள், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். மதுரை வரும் வழியில் பல்வேறு இடங்களில் ஆண்டாள் மாலைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டு நாளை இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை மாலை வந்தடைகிறது. அங்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இதனையடுத்து மே 1ம் தேதி காலை ஆண்டாள் சூடி களைந்த மாலையை அணிந்து கள்ளழகர் ஆற்றில் இறங்குகிறார்.