சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் துவங்கியது
சின்னமனூர்: சின்னமனூர் பூலாநந்தீஸ்வரர், சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா தேரோட்டம் நேற்று மாலை துவங்கியது.
சின்னமனூரில் பிரசித்தி பெற்ற பூலாநந்தீஸ்வரர் சிவகாமியம்மன் கோயில் சித்திரை திருவிழா நடைபெற்ற வருகிறது. திருவிழா கொடியேற்றம் ஏப். 21 ல் நடந்தது. தொடர்ந்து 18 நாட்களுக்கு மண்டகப்படி நடைபெறும். ஒவ்வொரு நாளும் சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரதில் பவனி வருகிறார்கள். நேற்று முன்தினம் காலை சுவாமிக்கும் அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை சுவாமியும், அம்மனும் திருத்தேரில் எழுந்தருளினார்கள். மாலை 5:00 மணியளவில் திருத் தேரினை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வடம் பிடித்தனர். 30 வது நிமிடத்தில் செக்காமுக்கு என்ற இடத்தில் தேர் நிலை நிறுத்தப்பட்டது. இரண்டு நாட்கள் நடைபெறும் தேரோட்டத்தில் இன்று (ஏப். 30) காலை 9:30 முதல் 10:00 மணிக்குள் செக்கா முக்கிலிருந்து வடம் பிடிக்கப்பட்டு, கண்ணாடி கடை சந்திப்பில் நிறுத்தப்படும். இன்று மாலை தேர் தெற்கு ரதவீதி, மெயின்ரோடு வழியாக நிலை நிறுத்தப்படும். தொடர்ந்து மே 8 வரை மண்டகப்படி தினமும் நடைபெறும். ஏற்பாடுகளை ஹிந்து சமய அறநிலையத் துறை செய்து வருகிறது.