கீழடிக்கு முந்தைய காலத்தின் கடல் சங்கு, எலும்புக்கூடு கண்டெடுப்பு
தொண்டாமுத்துார்: கோவை மாவட்டம், மோளப்பாளையத்தில் உள்ள மூலக்காடு பகுதியில், தஞ்சாவூர் தமிழ் பல்கலை கடல்சார் தொல்லியல் மற்றும் பண்டைய கால வரலாற்று துறை தலைவர் பேராசிரியர் செல்வகுமார் தலைமையிலான குழுவினர், 2021 மற்றும், 2024 என, இருமுறை அகழாய்வு மேற்கொண்டனர். இதில், பல்வேறு புதிய கற்கால பொருட்கள், மனிதர்களின் எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், மூன்றாவது முறையாக, இப்பகுதியில், பேராசிரியர் செல்வகுமார் குழுவினர், 47 நாட்களாக அகழாய்வு மேற்கொண்டு வருகின்றனர். இதில், கீழடிக்கு முந்தைய காலகட்ட புதிய கற்கால பொருட்கள் மற்றும் இரு குழந்தைகளின் முழு எலும்புக்கூடுகளை கண்டெடுத்தனர்.
பேராசிரியர் செல்வகுமார் கூறியதாவது: மோளப்பாளையத்தில் உள்ள தொல்லியல் இடம், புதிய கற்கால மக்களின் வாழ்விடமாக அமைந்துள்ளது. கி.மு., 1,600 முதல், 1,200க்கு இடைப்பட்ட காலம் என்பது ஆய்வகத்தில் உறுதியானது. மூன்று புறமும் மலைகள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில், குழி வீடுகள் பலவும் கண்டுபிடிக்கப்பட்டன. குழிகளில், பானைகள் வைப்பதற்கான அடுக்குகளையும் உருவாக்கியுள்ளனர். தற்போது, இரு குழந்தைகளின் முழு எலும்புக்கூடுகளை கண்டெடுத்துள்ளோம். தவிர, மான், ஆமை, ஆடு, மாடு உள்ளிட்டவற்றின் எலும்புகளும் கிடைத்துள்ளன; காண்டாமிருகத்தின் கால் எலும்பும் கிடைத்துள்ளது. மேலும், அம்மி போன்ற அரவைக்கற்களும், தானியங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதிய கற்கால மக்கள் தங்களுக்கு தேவையான உணவுகளை தயாரித்துள்ளனர். விலங்குகளின் மாமிசத்தையும் உண்டுள்ளனர். கற்கோடரிகளை உருவாக்கிஉள்ளனர். கால்நடை மேய்ச்சல் தொழிலில் ஈடுபட்டதும் உறுதியாகியுள்ளது. இப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள், கீழடிக்கு முந்தைய காலகட்டத்தை சேர்ந்தவை.இவ்வாறு, அவர் கூறினார்.