உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  குற்றாலம் அருவி பாறையில் சிவலிங்க சிற்பங்கள் சேதம்

 குற்றாலம் அருவி பாறையில் சிவலிங்க சிற்பங்கள் சேதம்

தென்காசி: குற்றாலம் மெயின் அருவியின் பாறைப்பகுதியில் புதிய ஆர்ச் கட்டுமான பணியின்போது, பாறையில் செதுக்கப்பட்டிருந்த பழமையான சிவலிங்க சிற்பங்கள் சேதமடைந்து வருவதாக புகார் எழுந்துள்ளன. தென்காசி மாவட்டம், குற்றாலநாத சுவாமி கோவில் அருகே அமைந்துள்ள இந்த அருவி, ஆன்மிக தலமாகவும் முக்கிய சுற்றுலா மையமாகவும் உள்ளது. சிவன் நடனமாடிய ஐந்து சபைகளில் ஒன்றான சித்திர சபை குற்றாலத்தில் அமைந்துள்ளது. மெயின் அருவியின் அடிப்பகுதியில், பல சிவலிங்கங்கள் பாறையில் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. அருவியில் வரும் மூலிகை தண்ணீரால், இச்சிற்பங்களில் இயற்கை அபிஷேகம் நடைபெறுகிறது என பக்தர்கள் நம்புகின்றனர். பயணியர் பாதுகாப்பிற்காக, இந்த அருவியின் முன், பெரிய சிமென்ட் தடுப்பு ஆர்ச் அமைக்கப்பட்டிருந்தது. அருவி நீரின் நீர்வரத்தை கட்டுப்படுத்தவும் அந்த ஆர்ச் பயன்பட்டது. தற்போது சீசனை முன்னிட்டு, பழைய ஆர்ச்சை இடித்து புதிய ஆர்ச் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த பணியின் போது பயன்படுத்தப்படும் இயந்திரங்கள் மற்றும் இரும்பு பொருட்கள் காரணமாக, அஜாக்கிரதயைாக சிற்பங்கள் சேதமடைகின்றன என கூறப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணியர், பக்தர்கள், உள்ளூர் மக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குற்றாலத்தின் பழமையான சிறப்புகளை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !