அக்னி நட்சத்திரம்; சிவாலயங்களில் லிங்க திருமேனிக்கு தாரா அபிஷேகம்
திருப்பூர்: அக்னி நட்சத்திரம் நேற்று துவங்கியது; சிவாலயங்களில், லிங்க திருமேனியின் மீது தாராபாத்திரம் பொருத்தி, அபிேஷகம் துவங்கியுள்ளது. சித்திரை மாதம் மற்றும் வைகாசி இடையே, 21 நாட்கள் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் துவங்கும். இந்நாட்களில், வெப்பம் அதிகரிக்கும் என்பதால், தாரா அபிேஷகம் துவங்கியுள்ளது. அதன்படி, 4ம் தேதிஅக்னி நட்சத்திரம் துவங்கி, 28ம் தேதி நிறைவு பெறுகிறது. அக்னி நட்சத்திர நாளில், பூமியை குளிர்விக்க வேண்டி, சிவாலயங்களில் சிறப்பு அபிேஷகம் துவங்கியுள்ளது. எனவே, லிங்க திருமேனியின் மீது தாராபாத்திரம் பொருத்தி, அதில், நறுமண பொருட்கள் கலந்த தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். நிமிடத்துக்கு ஒவ்வொரு சொட்டாக, நீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் அமைக்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக, லிங்கத்திருமேனி குளிர்ந்து, பூமியை குளிர் விக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி கோவில், திருப்பூர் மற்றும் நல்லுாரிலுள்ள விஸ்வேஸ்வர சுவாமி கோவில், பொங்கலுார் – அலகுமலை கைலாசநாதர் கோவில், திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, காசி விஸ்வநாதர் கோவில் உட்பட பல சிவாலயங்களில் லிங்க திருமேனிக்கு தாராபாத்திரம் வைத்து குளிர்வித்து பூஜைகள் நடைபெறுகின்றன.