உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அக்னி நட்சத்திரம் துவக்கம்: சிவனுக்கு தாராபாத்திரம் பொருத்தி அபிஷேகம்

அக்னி நட்சத்திரம் துவக்கம்: சிவனுக்கு தாராபாத்திரம் பொருத்தி அபிஷேகம்

பெரியகுளம்: அக்னி நட்சத்திரம் மே 4ல் துவங்கியதால் சிவாலயங்களில் சிவன் திருமேனியின் மீது தாராபாத்திரம் பொருத்தி அபிஷேகம் துவங்கியது.


சித்திரை மற்றும் வைகாசி இடையே 21 நாட்கள் அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் துவங்கியுள்ளது. இந்நாட்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால் சிவாலயங்களில் தாரா அபிஷேகம் துவங்கியுள்ளது. இதன்படி 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கி 28ம் தேதி நிறைவு பெறுகிறது. அக்னி நட்சத்திர நாளில் பூமியை குளிர்விக்க வேண்டி, சிவாலயங்களில் சிறப்பு அபிஷேகம் துவங்கியுள்ளது. லிங்கத் திருமேனியின் மீது தாராபாத்திரம் பொருத்தி, அதில் நறுமணப் பொருட்கள் கலந்த தண்ணீர் ஊற்றி வைக்கப்படும். நிமிடத்திற்கு ஒவ்வொரு துளியாக நீர் சிவலிங்கத்தின் மீது விழுவது போல் அமைக்கப் பட்டுள்ளது. இதன் மூலம் லிங்கத்திருமேனி குளிர்ந்து, பூமியை குளிர்விக்கும் கோடை மழை பெய்யும்‌, வீட்டில் மகிழ்ச்சி பெருகும் என்பது ஐதீகம். பெரியகுளம் காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் சிவன், பாலசுப்பிரமணியர் கோயில் ராஜேந்திர சோழீஸ்வரர் (சிவன்), கைலாசபட்டி கைலாசநாதர் உட்பட மாவட்டத்தில் பல்வேறு சிவாலயங்களில் தாராபாத்திரம் வைத்து குளிர்வித்து பூஜைகள் நடைபெறுகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !