பூமாயி அம்மன் கோயில் வசந்தப் பெருவிழா : பொங்கலிட்டு பெண்கள் வழிபாடு
திருப்புத்தூர்: திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயில் வசந்தப்பெருவிழா நான்காம் திருநாளில் பெண்கள் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
திருப்புத்தூர் பூமாயி அம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நிறைவடைந்து, மே7 ல் கொடியேற்றி, காப்புக்கட்டி வசந்தப் பெருவிழா நடந்து வருகிறது. தினசரி இரவில் அம்பாள் சர்வ அலங்காரத்தில் திருக்குளம் வலம் வருகிறார். நேற்று நான்காம் திருநாளை முன்னிட்டு பொங்கல் விழா நடந்தது. வசந்தப் பெருவிழா குழு சார்பில் பச்சரிசி, வெல்லம், ஏலக்காய், நெய், பால், தேங்காய் உள்ளிட்ட பொங்கல் பொருட்களும், அர்ச்சனை பொருட்களும் வழங்கப்பட்டன. காலை 8:00 மணி அளவில் கோயில் வளாகத்தில் வரிசையாக 108 பெண்கள் பொங்கலிட்டு பால் பொங்கியதும் குலவையிட்டு அம்மனை வழிபட்டனர். பின்னர் பொங்கலை அம்மனுக்கு படையலிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.
நடுநாயகமாக உள்ள பூமாயிஅம்மன் என்றழைக்கப்படும் வைஷ்ணவி உள்ளிட்ட மூலவர் சப்தமாதர்களும் சந்தனக்காப்பு ராஜ அலங்காரத்தில் அருள்பாலிக்க சிறப்பு தீபாராதனை நடந்ததது. தொடர்ந்து மாலையில் மூலவர்,உற்ஸவ அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்து, பின்னர் உற்ஸவ அம்மன் புறப்பாடாகி திருக்குளம் வலம் வந்தார். திரளாக பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். நாளை காலையில் பால்குட விழாவும், மே 15ல் இரவில் அம்மன் ரத ஊர்வலமும், மே 16 காலையில் தீர்த்தவாரியும், இரவில் தெப்பத்தில் அம்மன் எழுந்தருளி வலம் வருதலும் நடைபெறும்.