காஞ்சிபுரம் சங்கர மடத்தில் இளைய மடாதிபதி 27வது ஜெயந்தி மகோத்சவம்
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது ஜெயந்தி மகோத்சவம் நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் 27வது ஜெயந்தி மகோத்சவத்தையொட்டி காஞ்சிபுரம் சங்கர மடத்தில் நேற்று சிறப்பு யாகசாலை பூஜைகள் நடந்தன. சங்கர மடத்தில் உள்ள மஹா சுவாமிகள், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் பிருந்தாவனங்களில், கலசாபிஷேகமும், சிறப்பு அபிஷேகமும் மகா தீபாராதனைகளும் நடந்தன. காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய மடாதி பதிக்கு மலர்கிரீடம், மலர்மாலைகள் அணிவித்து ஆசி வழங்கினார். தொடர்ந்து காஞ்சிபுரம் சங்கரா கல்லுாரி முதல்வர் கலைராம வெங்கடேசன் தலைமையில், அக்கல்லுாரி பேராசிரியர்கள் இளைய மடாதிபதியை சந்தித்து சால்வை அணிவித்து ஆசி பெற்றனர். திருமலை திருப்பதி வெங்கடேச பெருமாள் கோவில், காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர், குமரகோட்டம், வரதராஜ பெருமாள் உள்ளிட்ட கோவில் நிர்வாகத்தின் சார்பில் கோவில் பிரசாதங்கள் கொண்டு வரப்பட்டு இளைய மடாதிபதிக்கு வழங்கப்பட்டன.