உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பக்தர்களிடம் மொட்டை போடும் ஊழியர்கள்: கண்டுகொள்ளுமா தேவஸ்தானம்!

பழநி பக்தர்களிடம் மொட்டை போடும் ஊழியர்கள்: கண்டுகொள்ளுமா தேவஸ்தானம்!

பழநி: பழநி கோவில் தேவஸ்தான முடி காணிக்கை நிலையங்களில், முடி இறக்கும் பக்தர்களிடம், 10 ரூபாய் கட்டணத்துடன், கூடுதலாக, 100 ரூபாய் வசூலிக்கின்றனர். பழநி கோவில் தைப்பூச விழாவை முன்னிட்டு, ஏராளமான பக்தர்கள் பாத யாத்திரை வருகின்றனர். இவர்கள் முடிகாணிக்கை செலுத்துவதற்காக, தேவஸ்தானம் சார்பில் சண்முகநதி, சரவணப்பொய்கை, பூங்காரோடு ரவுண்டானா ஆகிய இடங்களில், நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. முடி காணிக்கைக்கு, 10 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் என, தேவஸ்தானம் அறிவிப்பு பலகை வைத்துள்ளது. பக்தர்களிடம், 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு ரசீது தரப்படுகிறது. இதுதவிர, சம்பளம் குறைவு என்ற காரணம் கூறி, 100 ரூபாய் வரை வசூலிக்கின்றனர். பக்தர்கள் புகார் தெரிவித்தாலும், அவர்களுக்கு சம்பளம் குறைவு. அதனால் தான் பணம் கேட்கின்றனர், என, அலுவலர்கள் சமாதானம் செய்து அனுப்புகின்றனர். இதை தேவஸ்தான நிர்வாகம் கண்டும் காணமால் உள்ளது. ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருமானம் உள்ள பழநியில், திருமலை திருப்பதி போல, இலவசமாக முடி காணிக்கை செலுத்த வசதி செய்து தரவேண்டும். முடி இறக்கும் ஊழியர்களுக்கு, கூடுதல் சம்பளம் உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில், பக்தர்களிடம் முடி காணிக்கைக்கு கூடுதலாக கட்டணம் வசூலிப்பது தவறு தான். இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !