உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனித குலத்தை மாற்றியமைக்கும் சக்தி குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்; சிதானந்த் சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

மனித குலத்தை மாற்றியமைக்கும் சக்தி குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர்; சிதானந்த் சரஸ்வதி சுவாமிகள் புகழாரம்

பெங்களூரு; மனித குலத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் என்று சுவாமி சிதானந்த் சரஸ்வதி புகழாரம் சூட்டினார். 

பெங்களூருவில் உள்ள ஆர்ட்ஆஃப் லிவிங் அமைப்பின் 45வது ஆண்டு விழா மற்றும் குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் 70வது பிறந்த நாள் விழா நடைபெற்றது. இந்த விழாவில், தனித்துவ நிகழ்வாக, உக்ரைன் மற்றும் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பக்தர்கள் இணைந்து நடனமாடினர். சிறப்பு சத்சங்க மாலையில், ஜெய்சல்மேரைச் சேர்ந்த புகழ்பெற்ற ராஜஸ்தானி பாடகர் ஸ்வரூப் கானின் உள்ளத்தை உருக்கும் நாட்டுப்புற இசை நிகழ்ச்சியும் இடம்பெற்றது. அவரின் இசை, அங்கு திரண்டிருந்தவர்களை பக்தியிலும் கொண்டாட்டத்திலும் நனைத்தது. 

இந் நிகழ்வில் ஆன்மீகத் தலைவரும், ரிஷிகேஷில் உள்ள பரமார்த்த நிகேதன் ஆசிரம தலைவருமான சுவாமி சிதானந்த் சரஸ்வதி, சர்வதேச அளவில் புகழ்பெற்ற திவைன் சக்தி அறக்கட்டளை தலைவர் சாத்வி பகவதி சரஸ்வதி, ஹிந்துஜா குழும தலைவர் அசோக் ஹிந்துஜா மற்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும நிர்வாக இயக்குநர் அனந்த் கோயங்கா ஆகியோர் கலந்து கொண்டனர்.
.
நிகழ்ச்சியில் அனந்த கோயங்கா பேசியதாவது; 

இன்றைய உலகம் வன்முறை சக்தியைப் பற்றியதாகவே இருக்கும் சூழலில், குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இங்கே இருப்பது, இந்தியா கொண்டிருக்கும் சக்தியை நினைவூட்டுகிறது. அன்பினால் ஆன சக்தியின் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையினால் தான் இங்கே கூடியிருக்கிறோம்.

நான் இந்த ஆசிரமத்துக்கு வருவது இதுவே முதல் முறை,. சொர்க்கத்துக்கே வந்துவிட்டது போன்ற உணர்வு எனக்கு எற்பட்டுள்ளது. ஆசிரமத்திற்குள் நுழைந்த கணமே, அலுவலகங்கள் மற்றும் வெளி உலகத்தைப் பற்றிய எண்ணங்கள் அனைத்தும் மறைந்துவிட்டன.

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அறிவையும் நிர்வாகம் குறித்த ஒரு கருத்தையும் தந்தார். இன்று, அவரின் ஆசீர்வாதங்களால், நமது நிறுவனங்கள் மிகவும் சிறப்பாகச் செயல்படுகின்றன.

நிகழ்ச்சியில் சுவாமி சிதானந்த் சரஸ்வதி பேசியதாவது; 

குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், மனித குலத்தை மாற்றியமைக்கும் ஒரு சக்தி. இந்த புதிய உதயமும், அதில் கிடைக்க பெறும் ஒளியும் இன்று உலகம் முழுமைக்கும் தேவைப்படுகிறது. 

ஜாதி, இனம், நிறம், நாடு மற்றும் மதம் ஆகியவற்றைக் கடந்து முழு உலகமும் இங்கே உள்ளது. எங்கெல்லாம் மோதல்களும் சர்ச்சைகளும் இருக்கின்றனவோ, அங்கெல்லாம் சர்ச்சைகளை உரையாடலாகவும், பகைமையை அன்பாகவும், வெறுப்பை அன்பாகவும் குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மாற்றுகிறார் என்பதை கண்டிருக்கிறேன்.

நிகழ்ச்சியில் சாத்வி பகவதி சரஸ்வதி பேசியதாவது; 

இன்று, நாம் வெறும் 70 வருட வாழ்க்கையை மட்டும் கொண்டாடவில்லை. குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு வாழ்வளித்து, அவர்களுக்குள் புத்துணர்வை ஊட்டும் 70 ஆண்டுகளை நாம் கொண்டாடுகிறோம்.

45 ஆண்டுகளுக்கு முன்பு, வாழும் கலை’ (Art of Living) இயக்கத்திற்கான விதையை விதைத்தார். இன்று, அந்த விதை வளர்ந்து ஒரு விருட்சமாக உருவெடுத்துள்ளது; அது பூத்து, காய்த்து, 180 நாடுகளில் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ஆக்சிஜன், நீர், காற்று மற்றும் நிழலை வழங்கி வருகிறது.

உண்மையான நிலைத்து நின்று வரலாற்றைப் படைக்கும் புரட்சிகள அரசியல் சார்ந்தவையோ அல்லது வன்முறை சார்ந்தவையோ அல்ல. அவை உணர்வு நிலை சார்ந்த புரட்சிகளாகும். இந்த உலகம் முழுவதும் அன்பு மற்றும் அமைதி சார்ந்த ஒரு புரட்சியை நிகழ்த்தி வருகிறார்.

கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, ‘இந்தியா புல்லியன் அண்ட் ஜுவல்லர்ஸ் அசோசியேஷன் லிமிடெட்’ (India Bullion and Jewellers Association Limited) அமைப்பின் தலைவர் சேதன் குமார் மேத்தா, குருஜி ஸ்ரீஸ்ரீ ரவிசங்கருக்கு ‘கோஹினூர் ஆஃப் தி வேர்ல்ட்’ (Kohinoor of The World) என்ற விருதை வழங்கிக் கௌரவித்தார். 108 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அமைப்பு, இந்தியா முழுவதும் உள்ள 11 லட்சத்திற்கும் மேற்பட்ட நகை வணிகர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு உயர்மட்ட அமைப்பாகத் திகழ்கிறது. 

இந்தக் கொண்டாட்டங்களில், ராஜஸ்தானைச் சேர்ந்த பல முக்கிய அரச குடும்பங்களை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கரை சந்தித்தனர். இவர்களில் ஜெய்சால்மேரைச் சேர்ந்த இளவரசர் ஜன்மேஜய் ராஜ் சிங் மற்றும் ராஜமாதா ரஜேஸ்வரி ராஜலட்சுமி, பாலோதரா, ஜசோலைச் சேர்ந்த குன்வர் ஹரிச்சந்திர சிங், மஹந்த் ஸ்ரீ கணேஷ்புரி மஹராஜ்; பார்மர் கோட்டையைச் சேர்ந்த ராவத் திரிபுவன் சிங், உதய்பூர், கோகுண்டாவைச் சேர்ந்த தாக்கூர் விஸ்வ வர்தன் சிங்ஜாலா, ஜலோர், தாஸ்பனைச் சேர்ந்த தாக்கூர் பிரவீன் சிங் தாஸ்பன் மற்றும் தாக்குராணி ஷிவாலி சிங் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.இந்த நிகழ்வில், ​​விஷ்ணு பிரகாஷ் எழுதிய Hanging Boots (ஹேங்கிங் பூட்ஸ்) எனும் நூலும் வெளியிடப்பட்டது. வடகிழக்கு இந்தியாவில் நிலவிய கிளர்ச்சிச் சூழலை பேச்சுவார்த்தை மூலம் மாற்றியமைத்த குருஜி ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் பங்கை இந்நூல் ஆவணப்படுத்துகிறது. அவரது வழி காட்டுதலின் கீழ், பல்வேறு கிளர்ச்சிக் குழுக்கள் எவ்வாறு தங்கள் வன்முறை பாதையை கை விட்டுவிட்டு, நல்லிணக்கத்தை ஏற்றுக்கொண்டன என்பதை இந்நூல் விரிவாக விவரிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !