நங்கநல்லுாரில் கருட சேவை உத்சவம் விமரிசை
சென்னை: நங்கநல்லுார், எம்.எம்.டி.சி., காலனியில், பஞ்ச கருட சேவா சமதி, 2005ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது. இதன் சார்பில், கருட சேவை உத்சவம், நங்கநல்லுார், ஹிந்து காலனியில் உள்ள செல்லம்மாள் வித்யாலயா பள்ளியில், நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
முன்னதாக, நங்கநல்லுார் லட்சுமி நரசிம்ம நவநீத கிருஷ்ணன் கோவில், மடிப்பாக்கம் ஒப்பிலியப்பன் கோவில், மடிப்பாக்கம் கோதண்டராமர் கோவில், கீழ்கட்டளை ஸ்ரீனிவாசப் பெருமாள் கோவில்களில் இருந்து சுவாமிகள் எழுந்தருளினர். ஆதம்பாக்கம் லட்சுமி நரசிம்மர் கோவில் உற்சவர்கள் மற்றும் தரமணி, தேசிக தர்சன சபாவில் இருந்து நிகமாந்த மகாதேசிகன் ஆகியோரும், உத்சவத்தில் எழுந்தருளினர். அங்கு, ஐந்து உற்சவர்களும் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் எழுந்தருளி, நிகமாந்த மகா தேசிகனுக்கு காட்சியளித்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று, பெருமாளை தரிசித்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை, பஞ்ச கருட சேவா சமிதி டிரஸ்ட் அமைப்பின் நிர்வாகிகள் அம்மஞ்சி பாலாஜி, பரணிபிரசாத், ராமஞ்ஜிஸ்ரீதர் ஆகியோர் செய்திருந்தனர்.