சிதம்பரம் கோவிலில் 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்களின் பரதநாட்டியம்
பாலக்காடு: கேரள மறுமலர்ச்சி நாயகர் ஸ்ரீநாராயண குருதேவர், தமிழ்நாட்டின் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றபோது இயற்றிய ‘சிதம்பராஷ்டகம்’ என்ற ஆன்மீகப் படைப்பு, பரதநாட்டிய வடிவில் அரங்கேறவுள்ளது. வரும் 27ம் தேதி மாலை 4:30 மணிக்கு சிதம்பரம் கோவில் மண்டபத்தில் 100க்கும் மேற்பட்ட நடனக் கலைஞர்கள் ஒன்றிணைந்து இந்த நாட்டியாஞ்சலியை சமர்ப்பிக்கின்றனர்.
ஸ்ரீநாராயண குருவின் உன்னதப் படைப்புகளை இந்திய பாரம்பரிய நடனக் கலைகள் மூலம் மக்களிடம் கொண்டு சேர்க்கும் தெய்வதசகம் கூட்டமைப்பு’ தங்களது ‘என் குரு’ திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பிரம்மாண்ட நிகழ்வை நடத்துகிறது.
இதுகுறித்து இந்நிகழ்ச்சியின் நடன இயக்குனரும், ஒற்றப்பாலம் பகுதியைச் சேர்ந்த கூட்டமைப்பின் செயல் தலைவருமான ரம்யா கூறியதாவது: ஸ்ரீநாராயண குருவின் தத்துவங்களையும் பாடல்களையும் அடுத்த தலைமுறைக்கு நடனக் கலையின் மூலம் கடத்துவதே இத்திட்டத்தின் நோக்கம் என்றார். முன்னதாக, நடனக் கலைஞர்களுக்கான சிறப்புப் பயிற்சி முகாமினை தெய்வதசகம் கூட்டமைப்பின் தலைவர் கிரீஷ் உன்னிகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்.