வடலூர் தருமச்சாலையில் கொடியேற்றம்; 3 நாட்களுக்கு இசை விழா
வடலூர்: வடலூரில் தருமச்சாலை துவக்க விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மூன்று நாட்கள் இசை விழா நடைபெறுகிறது
சன்மார்க்க கருத்துகளை போதிக்கும் வள்ளலார் எனும், இராமலிங்க அடிகளார், கடலூர் மாவட்டம், வடலூரில், கடந்த (23.5.1867) வைகாசி மாதம், 11ம் தேதி, பசிப்பிணி போக்க தருமச்சாலையை நிறுவினார். அன்று தொடங்கி இன்று வரை வடலூரில் அணையா அடுப்பு மூலம் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. தருமச்சாலை, 160வது ஆண்டு விழா இன்று காலை தருமச்சாலை பகுதியில், சன்மார்க்கக் கொடி உயர்த்தப்பட்டு துவங்கியது. முன்னதாக விழாவையொட்டி காலை, 5:00 மணிக்கு அகவல் பாராயணம் நடந்தது. அதனை தொடர்ந்து சீர்காழி சிவசிதம்பரம் கலந்து கொண்ட திருஅருட்பா இன்னிசை நிகழ்ச்சி, தருமச்சாலை சிறப்பு குறித்த வில்லுப்பாட்டு இசை நிகழ்ச்சி, ஜீவகாருண்ய ஒழுக்கம் சத்விசாரம், சொற்பொழிவு, ஆறாம் திருமுறை, சன்மார்க்க நெறி, நான்கு வகை ஒழுக்கம், வள்ளலார் அருளிய ஞானசரியை ஆகியவை குறித்த சத்விசாரம் என, நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தன. விழாவையொட்டி முன்னதாக வைகாசி மாதம், 4ம் தேதி தொடங்கி, தருமச்சாலையில் அருட்பெருஞ்ஜோதி மகா மந்திர பாராயணம், 7ம் தேதி முதல் சத்திய ஞான சபையில் திருஅருட்பா முற்றோதல், தருமச்சாலை மேடையில் திருஅருட்பா இன்னிசை, வில்லுப்பாட்டு ஆகியவை நடந்தன.
திருஅருட்பா இசை விழா; தருமச்சாலை துவக்க விழாவை முன்னிட்டு, 41வது ஆண்டு திருஅருட்பா இசை விழா வடலூர் பெருவெளியில் நேற்று காலை துவங்கியது. இன்று, நாளையும் என, 3 நாட்கள் நடைபெறும் இசை விழாவில் ஏராளமான பிரபல பாடகர்கள், இசை மற்றும் வாத்திய கலைஞர்கள் திருஅருட்பா பாடல்களை இசை விழா மேடையில் பாடுகின்றனர். விழா ஏற்பாடுகளை வடலூர் திருஅருட்பா இசை சங்கம், வள்ளலார் தெய்வ நிலையம், சன்மார்க்க அன்பர்கள் இணைந்து செய்துள்ளனர். விழாவையொட்டி வடலூர் சத்திய ஞான சபை, தருமச்சாலை மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வடலூர் நகரம் விழாக்கோலமாக காணப்படுகிறது.