திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் திருமண முன்பதிவுக்கு குவிந்த பக்தர்கள்
திருப்போரூர்: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோவில் நகரங்களில் ஒன்றாக திருப்போரூர் விளங்குகிறது; இங்குள்ள கந்தசுவாமி கோவிலில் தினமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இக்கோவிலில், கடந்த 2023ம் ஆண்டு 2.36 கோடி ரூபாயில் திருமண மண்டபம், 50 லட்சம் ரூபாயில் பக்தர்கள் தங்கும் விடு தி; 49.80 லட்சம் ரூபாயில் பக்தர்கள் ஓய்வுக்கூடம் உள்ளிட்டவை கட்டப்பட்டுள்ளன.
அதேபோல், திருப்போரூர் மற்றும் கோவில் மாட வீதிகளை சுற்றி 20க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்களும் உள்ளன. இதனால், இப்பகுதியில் முகூர்த்த நாட்களில், ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. இந்நிலையில், திருமணம் நடத்துவதற்கான பணிகளில் பக்தர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். வரும் 28, 29 ம் தேதிகளில் முகூர்த்த நாள் என்பதால், 60க்கும் மேற்பட்ட ஜோடி திருமணத்திற்கு முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, விண்ணப்ப படிவம் பெற்ற மணமக்கள் வீட்டார், பூர்த்தி செய்து கோவில் அலுவலகத்தில் சமர்பிக்க வந்த வண்ணமாய் உள்ளனர்.
நடைமுறை என்ன? கோவிலில் திருமணம் செய்வதற்கு, மணமக்கள் மற்றும் பெற்றோர் ஹிந்துவாக இருக்க வேண்டும். திருமணத்திற்கு 30 நாட்களுக்கு முன் பதிவு செய்ய வேண்டும். திருமண பதிவுக்கு 3,000 ரூபாய், விண்ணப்ப படிவம் 100 ரூபாய், வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க 150 ரூபாய் செலுத்த வேண்டும். விண்ணப்ப படிவம் பெறும்போது பள்ளிச் சான்றிதழ் அல்லது பிறப்புச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதார் அட்டை அசல், நகல் சமர்ப்பிக்க வேண்டும்.