உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோவில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் சமேத சிவகாமி சுந்தரி அம்பாள் கோயிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


குன்றக்குடி தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் வைகாசி விசாக விழா பத்து நாட்கள் நடைபெறும். விழா துவக்கத்தை முன்னிட்டு நேற்று மாலை சிவாச்சார்யர்களால் பூர்வாங்க பூஜைகள் துவங்கியது. கொடி மரம் அருகில் சோமஸ்கந்தர், பெரியவுடையார் ஸ்கந்தர், சிவகாமி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர்,வள்ளி தெய்வானை சுப்பிரமணியன்,  சண்டிகேஸ்வரர் உள்ளிட்ட ஐம்பெரும் கடவுளர்கள் எழுந்தருளினர். தொடர்ந்து கொடிப்படம் திருவீதி வலம் வந்தது.


இன்று காலை 6:00 மணிக்கு நந்தி மண்டபத்தில் யாகசாலை பூஜைகள் துவங்கின. பூஜைகள் நிறைவடைந்து பூர்ணாகுதி தீபாராதனை நடந்து கொடிமரத்திற்கு அபிேஷக,ஆராதனைகள் நடந்தன. பின்னர் காலை 7:40 மணிக்கு பாஸ்கர் குருக்களால் கொடியேற்றம் நடந்தது. பின்னர் சிவாச்சார்யருக்கு காப்பு கட்டுதல் நடந்தது. தொடர்ந்து சுவாமிக்கும், கொடிமரத்திற்கும் பூஜைகள் நடந்து தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்ட கொடி மரத்திற்கு அலங்கார சிறப்புத் தீபாராதனை நடந்தது. இரவில் சூரிய பிறை, சந்திர பிறைகளில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடக்கிறது. 23ம் தேதி இரவு கற்பக விருட்சம், காமதேனு  வாகனத்தில் திருவீதி உலா நடைபெறும். தினசரி இரவில் வாகனங்களில் சுவாமி,அம்பாள் எழுந்தருளி திருவீதி உலா நடைபெறும். மே 24 காலையில் திருத்தளிநாதருக்கு மந்திரநீர் முழுக்காட்டு தீபாராதனை, மே 25 ல் திருக்கல்யாணம், மே 28 காலையில் நடராஜர் திருவீதி உலா, மே 29ல் தேரோட்டமும், மே 30ல் தெப்பத்திருவிழாவும் நடைபெறும். ஏற்பாட்டினை தேவஸ்தானம், மண்டகபடிதாரர்கள் செய்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !