கொண்டத்துக்காளியம்மன் கோவிலில் உண்டியல் திறப்பு
பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள கொண்டத்து காளியம்மன் கோவிலில், உண்டியல்கள் நேற்று திறந்து காணிக்கை எண்ணப்பட்டது.
மாவட்ட அறநிலையத்துறை உதவி ஆணையர் மதிவாணன், ஆய்வாளர் வீரப்பன் மற்றும் செயல் அலுவலர் முருகன் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்பட்டு, காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில், 17 லட்சத்து 70 ஆயிரத்து 847 ரூபாய் ரொக்கம், 22.500 கிராம் தங்கம் மற்றும் 295 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். காணிக்கை எண்ணும் பணியில் திருப்பூர் மகாவிஷ்ணு சேவா சங்கம், பெருமாநல்லுார் கே.எம்.சி. பள்ளி மாணவர்கள் ஈடுபட்டனர். கொண்டத்துக் காளியம்மன் கோவில், அறங்காவலர் குழு தலைவர் மனோகரன், அறங்காவலர்கள் திருமூர்த்தி, சண்முகம், பானுமதி மற்றும் கோவில் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர். உண்டியல் எண்ணும் பணி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாலையில் கோவில் வளாகத்தில் ஏலம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொம்மை கடை, எவர் சில்வர் பாத்திர கடை, பொறிக்கடை ஆகியவற்றிற்கான உரிமங்களும், சிதறு தேங்காய், ஆடு கோழி சேகர உரிமங்களும், உத்தமலிங்கேஸ்வரர் கோவில் பூஜை பொருட்கள் விற்பனை மற்றும் வாகன பாதுகாப்பு உரிமங்களும் ஏலம் விடப்பட்டன.