பாவங்களை போக்கும் மஹா கூடேஸ்வரர்
பாதாமி தாலுகாவின், மஹாகூடா தீர்த்தத் தலம், ‘தென்காசி’ என்றே பிரசித்தி பெற்றதாகும். ரிஷிகள் தவம் செய்த இடம் என்பதால், இங்குள்ள தீர்த்த குளம் கோடைக்காலத்தில் கூட வற்றுவது இல்லை. இங்கு வரும் பக்தர்கள் புனித நீராடி, கடவுளை தரிசிக்கின்றனர்.
பாகல்கோட் மாவட்டம், பாதாமி தாலுகாவில், மஹாகூடா தீர்த்தத்தலம் உள்ளது. இங்கு மஹாகூடேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இது சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.
சாளுக்கியர்கள்
மஹாகூடா தீர்த்த தலத்தில், சாளுக்கியர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட, சிறு, சிறு கோவில்கள் உள்ளன. கோவில்கள் அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே அமைந்திருப்பது, மற்றொரு சிறப்பு. இங்கு சிவன், சிவலிங்கம் என, பல கடவுள்களின் விக்ரகங்கள் உள்ளன. மஹாகூடேஸ்வரர் கோவிலுக்கு நடுவே, அற்புதமான தீர்த்தக்குளம் உள்ளது. இது கோடைக் காலத்திலும் வற்றுவதே இல்லை. ரிஷிகள் இங்கு தவம் செய்ததாக புராணங்கள் கூறுகின்றன. இதே காரணத்தால் குளம் வற்றுவதில்லை என, பக்தர்கள் நம்புகின்றனர்.
குடும்பத்துடன் வரும் பக்தர்கள், குளத்தில் மூழ்கி புனித நீராடி மஹாகூடேஸ்வரரை தரிசிக்கின்றனர். இந்த தீர்த்த குளத்தில் ரிஷிகள் தவம் செய்ததால், இதில் மூழ்கி எழுந்தால், பாவங்கள் ஒழிந்து விமோச்சனம் கிடைக்கும் என்பது ஐதீகம். கோவிலின் சிறப்பை அறிந்து, தொலை துாரத்தில் உள்ள ஊர்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். குளத்தில் நீராடி சிவனை தரிசிக்கின்றனர். வெளிநாட்டு சுற்றுலா பயணியருக்கும் பிடித்தமான இடமாகும்.
பக்தர்கள் அவதி
வரலாற்று பிரசித்தி பெற்ற இந்த இடத்தில், அடிப்படை வசதிகள் இல்லை. ஹோட்டல்களும் இல்லை. மஹாகூடேஸ்வரர் குடிகொண்டுள்ள புண்ணிய தலத்தில், பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் இருப்பது அவசியம். தினமும் இங்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணியர் வருகின்றனர். அவர்கள் சரியான வசதிகள் இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே விரைவில் அடிப்படை வசதிகளை செய்யும்படி, பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்.