முருகனுக்கு அரோகரா.. திருச்செந்தூர் கந்தசஷ்டி பெருவிழா குவியும் பக்தர்கள்..
திருச்செந்தூர்: திருச்செந்தூர் கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
உலகப் புகழ்பெற்ற கந்தசஷ்டி திருவிழா திருச்செந்தூர் முருகன் கோவிலில் நாளை யாகசாலை பூஜைகளுடன் துவங்குகிறது. நள்ளிரவு 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, காலை 5 மணியில் இருந்து 6 மணிக்குள் ஜெயந்திநாதர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளார்.
நாளை நவம்பர் 10 முதல் 16ம் தேதி வரை நடைபெறவுள்ள கந்தசஷ்டி பெருவிழாவில், நவம்பர் 15 ஆம் தேதி சூரசம்ஹாரமும், நவம்பர் 16 ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெறவுள்ளன. பெருந்திரளாக வருகை தரும் பக்தர்களின் வசதிக்காக முக்கிய ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 11 இடங்களில் 1,02,673 சதுரடி பரப்பளவில் நிழற்கொட்டகைகள், 300 தற்காலிகக் கழிவறைகள் மற்றும் குடிநீர் வசதிகள், 15,000 பக்தர்களுக்கு நாள் முழுவதும் அறுசுவை உணவு, முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்காக 4 கட்டணமில்லா சுற்றுப் பேருந்துகள், 6 லட்சம் குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1 லட்சம் பிஸ்கட் பாக்கெட்டுகள், 493 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள், 10,000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் வாகன நிறுத்தங்கள், 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். மேலும் சிறப்பு மருத்துவ முகாம்கள் மற்றும் தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள், 26 இடங்களில் பெரிய அளவிலான LED திரைகள், 400 தூய்மைப் பணியாளர்கள் மூலம் சுகாதாரப் பணிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், கடலில் நீராடும் பக்தர்களின் பாதுகாப்பிற்காக கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.