உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்துார் கோவிலில் ஆகம விதிகள் மீறல்; சுதந்தர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபா ஐகோர்ட் கிளையில் மனு

திருச்செந்துார் கோவிலில் ஆகம விதிகள் மீறல்; சுதந்தர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபா ஐகோர்ட் கிளையில் மனு

மதுரை: திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆகம விதிகளை மீறி நடை திறப்பு, பூஜை நேரங்களை மாற்றி அமைத்துள்ளதாக ஐகோர்ட் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோவில் சுதந்தர பரிபாலன ஸ்தலத்தார்கள் சபா சார்பில் அதன் செயலர் தாக்கல் செய்த மனு:  இக்கோவில் செயல் அலுவலர் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, மே 14 கோவில் நடை திறக்கும் நேரத்தை அதிகரித்து ஒரு புதிய உத்தரவைப் பிறப்பித்துள்ளார். கோவிலின் நடை சாத்துதல், நடை திறத்தல் ஆகியவை பல நுாற்றாண்டுகளாக ஆகம விதிகள், ஆன்மிக நெறிமுறைகளின்படியே நடத்தப்பட்டு வருகின்றன.  பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கிறது என்பதற்காக பாரம்பரியமிக்க கோவில் நேரங்களை மாற்றக் கூடாது. நேரத்தை மாற்றுவது குறித்து முடிவெடுக்க ‘வித்யாகர்’ என்ற நிபுணர் குழு அதிகாரம் பெற்றுள்ளது. அவரிடம் எந்தவித ஆலோசனை, ஒப்புதல் பெறாமல் செயல் அலுவலர் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்துள்ளார். எனவே, இந்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன் விசாரணைக்கு வந்தது. கோவில் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்வதைத் தடுக்கவே இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் எந்தவிதமான ஆகம விதிகளும் மீறப்படவில்லை’ என்றார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி: கோவில் நேர மாற்றத்தில் ஆகம விதிகள் மீறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை ஆராய்ந்து முடிவு செய்யும் நிபுணத்துவம் இந்த நீதிமன்றத்திற்கு இல்லை. எனவே, ஆகம விதி மீறல் குறித்த இந்த புகாரை மனுதாரர், துாத்துக்குடி மண்டல அறநிலையத்துறை இணை ஆணையரிடம் மனுவாகத் தாக்கல் செய்யலாம். இந்த உத்தரவு நகல் கிடைத்த இரண்டு வாரங்களுக்குள் மனுதாரர் மனு தாக்கல் செய்ய வேண்டும். அவ்வாறு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில், கோவில் தக்கார் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் நோட்டீஸ் அனுப்பி, அவர்களிடம் விசாரணை நடத்தி, மனு தாக்கல் செய்யப்பட்ட தேதியிலிருந்து நான்கு மாதங்களுக்குள் மண்டல இணை ஆணையர் இறுதி முடிவு எடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !