உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி; தங்க கட்டிகள் திருடு போனதாக பகீர் புகார்

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி; தங்க கட்டிகள் திருடு போனதாக பகீர் புகார்

திருவனந்தபுரம்: புகழ்பெற்ற பத்மநாபசுவாமி கோவில் பாதுகாப்பில் குளறுபடி காரணமாக, பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் திருடு போனதாக டிஜிபி அறிக்கையில் வெளியாகி உள்ளது.

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் பாதுகாப்பில் குளறுபடி காரணமாக, பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்கக் கட்டிகள் திருடு போனதாக டிஜிபி அறிக்கையில் வெளியாகி உள்ளது.

இது குறித்து டிஜிபி ராவதா ஏ.சந்திரசேகர் சமர்ப்பித்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த சில மாதங்களாக கோயிலுக்கு வழங்கப்பட்ட கிட்டத்தட்ட 78 கிராம் தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் காணாமல் போய் இருக்கிறது. பராமரிப்புக்காக அகற்றப்பட்ட பல அடுக்கு தங்க விளக்கு, எந்தவொரு அதிகாரப்பூர்வ ஆவணங்கள் இல்லாமல் மாற்றப்பட்டுள்ளது.

சேமிக்கப்பட்டுள்ள அனைத்து தங்கம் மற்றும் வெள்ளி மதிப்புமிக்க பொருட்களும் பாதுகாப்பான அறைக்குள் மாற்ற வேண்டும். கோவில் ஊழியர்கள், பாதுகாப்பு பணியாளர்கள் மற்றும் அரச குடும்பத்தின் கூட்டாளிகள் உட்பட சில நபர்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்படாமல் கோவிலுக்குள் நுழைந்துள்ளனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோவிலில் தங்க திருட்டு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், மற்றொரு பெரிய கோவிலில் திருட்டு புகார் வந்து இருப்பது பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !