எஸ். தும்மலபட்டி பாலசுப்ரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்
பட்டிவீரன்பட்டி; எஸ்.தும்மலப்பட்டி சோழிய வெள்ளாளர் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட பாலசுப்பிரமணியர் சாமி கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. முதல் நாள் கணபதி, வாஸ்து ஹோமத்துடன் முதல் கால யாக பூஜை தொடங்கியது. மாலை இரண்டாம் கால யாகபூஜை, பரிவார தேவதைகளை அழைத்தல், பாராயணம் நடந்தது. அனைத்து கோபுரங்களுக்கும் கலசங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன. நேற்று மூன்று, நான்காம் கால யாகபூஜையில் ருத்ர ஹோமம், சண்டி ஹோமம் நடந்தது. அன்று இரவு கோயில் மூலவர்கள் விநாயகர் வள்ளி, தேவசேனா உடனுறை பாலசுப்பிரமணியர் சன்னதியில் எந்திர பிரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நடந்தது.
இன்று 5ம் கால யாக பூஜை வேள்விகள் நடந்தது. புண்ணிய தலங்களிலிருந்து கொண்டுவரப்பட்ட தீர்த்த கலசங்கள் கோயிலை வலம் வந்தது. இதனைத் தொடர்ந்து சாது சடைசுவாமிகள், முத்து விநாயகர், வள்ளி தேவசேனா உடனுறை பாலசுப்பிரமணியர் கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. அனைத்து தெய்வங்களுக்கும் சிறப்பு அலங்காரம் தீபாரதனை நடத்தி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. கும்பாபிஷேகத்தை அய்யம்பாளையம் கந்தப்ப ஆதீனம் சோமசுந்தரம், திருநாவுக்கரசு குருக்கள் தலைமையில் குழுவினர் நடத்தினர். அன்னதானம் நடந்தது.