வடபழனி முருகன் கோவிலில் வைகாசி விசாக விழா; அரோகரா கோஷத்துடன் அலைமோதும் பக்தர்கள்
சென்னை; வைகாசி விசாகத் திருநாளையொட்டி, வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசைகளில் காத்திருந்த பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
சென்னை, வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா மே 21ல் கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. 10 நாள் பிரம்மோத்சவ விழாவில் தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் வீதி உலா வந்து அருள்பாலி்ததார். விழாவில் 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா , 25ம் தேதி நாக வாகனத்தில் சுப்பிரமணியர், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெற்றது. பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான, வைகாசி விசாகமான இன்று 30ம் தேதி காலை 7:35 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடைபெற்றது. காலை 9:00 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடைபெற்றது. வைகாசி விசாக நாளில் முருகனை வழிபட்டால் சகல நன்மைகளும் கிடைக்கும் என்பதால், பக்தர்கள் பால் குடம், காவடி எடுத்தும், அலகு குத்தியும் அரோகரா பக்தி முழக்கங்களுடன் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். இன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது.