அலகுமலையில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலம்
பொங்கலூர்: அலகுமலை ஸ்ரீ முத்துக்குமார பால தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா நேற்று மாலை வெள்ளிக்கிழமை மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டுடன் துவங்கியது. பூர்வாங்க பூஜைகள் நடத்தப்பட்டது. 1,108 புதிய கலசங்கள் வாங்கப்பட்டு, ஒவ்வொரு கலசத்திலும் முருகப்பெருமானை எழுந்தருளச் செய்யப்பட்டது. ஸ்கந்த, வேத, காயத்ரி, மூல, மாலா, ரகசிய மந்திரங்களால் ஜபம் செய்யப்பட்டது. விசேஷ உபசார பூஜை, மகா தீபாராதனை நடந்தது. இன்று காலை, 1,108 கலச பூஜை துவங்கியது. பல்வேறு மந்திரங்கள் ஓதி சிவாச்சாரியார்கள் யாகத்தை நடத்தினர். 96 விதமான மங்கல மூலிகை பொருட்கள் பயன்படுத்தப்பட்டது. அருள் சக்தியூட்டப்பட்ட, 1,108 புதிய கலசங்கள் வைத்து பூஜிக்கப்பட்டு கலசாபிஷேகம் நடத்தப்பட்டது. வள்ளி தெய்வானை சமேதகராக முத்துக்குமார பாலதண்டாயுதபாணி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பாலதண்டாயுதபாணி அருள் பெற்றனர். பின்,தங்க தேரோட்டம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.