வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா நிறைவு
ஸ்ரீபெரும்புதுார்; வல்லக்கோட்டை முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா, சண்டிகேஸ்வரர் உத்சவத்துடன் நிறைவடைந்தது.
ஸ்ரீபெரும்புதுார் அருகே, வல்லக்கோட்டையில் முருகன் கோவில் அமைந்துள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த இக்கோவில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருள்பாலிக்கிறார். இக்கோவிலில், கொரோனா பெருந்தொற்று மற்றும் கோவில் கும்பாபிஷேக திருப்பணிகளால் ஏழு ஆண்டுகளாக பிரம்மோத்சவ விழா நடைபெறவில்லை. இதையடுத்து, ஏழு ஆண்டுகளுக்கு பின் வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா இம்மாதம் 21ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பத்து நாள் நடைபெறும் விழாவில், வெள்ளி மயில் வாகனம், சூர்யபிரபை, சந்திரபிரபை, கேடய உற்சவம், ஆட்டுக்கிடா வாகனம், கற்பக விருட்ச வாகனங்களில் நாள்தோறும் முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு செய்து அருள்பாலித்தார்.
விழாவின் ஏழாம் நாள் தேர் திருவிழா வெகு விமரிசையாக நடந்தது. இந்த நிலையில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழாவின் இறுதி நாளான இன்று முருகசண்டிகேஸ்வரர் வள்ளி இடப வாகனத்தில், முருகப்பெருமான் எழுந்தருளி வீதியுலா புறப்பாடு சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, மயில் மண்டபத்தில் சண்டேச நாயனருக்கு 18 வித பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இரவு, சாந்தி அபிஷேகம் மற்றும் விடையாற்றி உத்சவம் நடந்தது.